

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். பின்னர் அவர் லக்னோ சென்று அங்கு நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் தெரியப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
லக்னோவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் அவரது மகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்தும் கலந்து கொண்டனர். பின்னர் கனிகா கபூருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் வசுந்தரா ராஜேவும் அவரது மகன் துஷ்யந்தும் சுய தனிமைப்படுத்தலைக் கடைப்பிடித்தனர்.
தான் வெளிநாடு சென்று வந்ததை யாரிடமும் சொல்லாமல் மறைத்த கனிகா கபூரை இணையத்தில் பலரும் திட்டித் தீர்த்தனர். அவரைக் கைது செய்யவேண்டும் என்று பல தரப்பிலிருந்து குரல்கள் வலுத்த நிலையில் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
லக்னோ மருத்துவமனையில் கனிகா கபூர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரோடு தொடர்பில் இருந்த 260 பேரை போலீஸார் தொடர்புகொண்டு கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் 3-வது முறையாக கனிகா கபூருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது.