‘‘நீங்கள் போராளி; சவாலை நிச்சயம் எதிர்கொள்வீர்கள்’’ - கரோனா தொற்றுக்கு ஆளான போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி ட்வீட்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நீங்கள் ஒரு வீரர். இந்த சவாலை நீங்கள் நிச்சயம் எதிர்கொள்வீர்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,658 ஆக உயர்ந்துள்ளது. 578 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனிலும் கரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நிலைமை மோசமடைந்ததை அடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டனை 3 வாரங்களுக்கு லாக்-டவுன் செய்து அண்மையில் உத்தரவிட்டார்.

இதற்கிடையே அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இதையடுத்து இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நீங்கள் ஒரு போராளி. இந்தச் சவாலை நீங்கள் நிச்சயம் எதிர்கொள்வீர்கள். நீங்கள் உடல் நலம் பெறவும், பிரிட்டன் கரோனா தொற்றில் இருந்து மீண்டெழவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in