Last Updated : 27 Mar, 2020 02:24 PM

 

Published : 27 Mar 2020 02:24 PM
Last Updated : 27 Mar 2020 02:24 PM

21 நாள் லாக்-டவுன்: ஆதரவற்றவர்களின் பசிபோக்க களமிறங்கிய ஆதித்யநாத், கேஜ்ரிவால்: சமுதாய உணவுக்கூடங்கள் அமைப்பு

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் 21 நாட்கள் ஊரடங்கு நாடு முழுவதும் கடைப்பிடித்து வரும் நிலையில் ஆதரவில்லாதவர்கள், வீடில்லாதவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள்தான் உணவுக்காகப் பெரிதும் வேதனையைச் சந்திக்கிறார்கள்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், நல்ல உள்ளம் படைத்தோர் அவ்வப்போது ஊரடங்கில் உதவினாலும் பல கட்டுப்பாடுகள்,போலீஸாரின் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஆதரவில்லாதவர்களின் பசியைப் போக்கும் பொருட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சமுதாய உணவுக்கூடங்களை அமைத்துள்ளனர்.

கரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல்தான் தீர்வு என்ற நிலையில் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. கரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர், பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வீடு இருப்போர், வாடகை வீட்டில் வசிப்போரும் இந்தக் காலகட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து விடலாம்

ஆனால், சாலையோரத்தில் பிச்சை எடுத்துப் பிழைப்போர், ஆதரவில்லாதவர்கள், வீடில்லாதவர்கள் ஆகியோரின் நிலை இந்த 21 நாட்களும் வேதனைக்குரிய நாட்களாகும். யாராவது உணவு தரமாட்டார்களா என ஏங்கி வருகின்றனர். இதில் வீடில்லாதவர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்கிய போதிலும் சமைக்க பாத்திரம், விறகு, எரிபொருள் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.

லக்னோவில் சமுதய உணவுக்கூடத்தை ஆய்வு செய்த முதல்வர் ஆதித்யநாத் : படம் ஏஎன்ஐ

இதைப் பார்த்த முதல்வர் யோகி ஆதித்யநாத் சமூதாய உணவுக்கூடங்களை அமைத்துள்ளார். ஆதரவில்லாதவர்கள் அனைவருக்கும் இந்த உணவுக்கூடத்திலருந்து உணவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளர்.

இது தொடர்பாக உ.பி. கூடுதல் உள்துறை செயலாளர் அவினாஷ் அஸ்வதி கூறுகையில் “ சமுதாய உணவுக்கூடம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்து, யாருக்கெல்லாம் உணவு தேவையோ அவர்களுக்கு அதிகாரிகள் வழங்கினார்கள்,

அரசுக்கு உதவுவதற்காக 15 தொண்டு நிறுவனங்கள், மதக்குழுக்கள், தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். முதல் கட்டமாக லக்னோ, ஆக்ரா, நொய்டா, காஜியாபாத்தில் இந்த சமுதாய உணவுக்கூடம் செயல்படுகிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம்

சமையலுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஏழைகளுக்கு வழங்கினோம். ஆனால் எரிபொருள் இல்லாததால் அவர்களால் சமைக்க முடியவில்லை. சாலையில் வசிப்போருக்கு மட்டுமல்லாமல், ஊரடங்கு உத்தரவால் முடங்கிக் கிடப்போருக்கும் உணவுகளை வழங்குகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதேபோல டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மாவட்டம் தோறும் சமுதாய உணவுக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளார். டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சாலையோரம் வசிப்போர், வீடில்லாதவர்கள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவு வழங்கும் வகையில் சமுதாய உணவுக்கூடத்தை மாவட்டந்தோறும் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டந்தோறும் அமைக்கப்படும் சமூக உணவுக்கூடத்துக்கு பொறுப்பாக மாவட்ட ஆட்சியர்கள் இருப்பார்கள். மதிய உணவு, இரவு உணவு இரண்டும் ஆதரவில்லாதவர்களுக்கு வழங்கப்படும். உணவு வழங்கப்படும்போது கண்டிப்பாக சமூக விலகல் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படும்” எனத்தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x