Last Updated : 27 Mar, 2020 12:39 PM

 

Published : 27 Mar 2020 12:39 PM
Last Updated : 27 Mar 2020 12:39 PM

கரோனா அச்சுறுத்தல்; ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தை விற்பனை செய்யக் கட்டுப்பாடு: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி,

ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்து கரோனா வைரஸாஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்தாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இதன் விற்பனைக்குக் கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதுவரை 17 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பு மருந்து ஏதும் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் மலேரியா நோய்க்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்தது. ஆனால், இந்த மருந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படிதான் வழங்கப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மருந்தை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலின் கீழ் கொண்டு வந்து, அதன் விற்பனையை முறைப்படுத்தி, மத்திய அரசு நேற்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ''கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர் காக்கும் வகையில் மலேரியா நோய்க்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தை வழங்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளது மனநிறைவு அளிக்கிறது.

பொதுநலன் கருதி, ‘ஹைட்ராக்ஸி குளோரோ குயின்’ என்ற மருந்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதும் கட்டுப்படுத்துவதும் அவசியமாகும். அவற்றின் தவறான பயன்பாட்டைத் தடுப்பது அவசியமாகும். மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940, பிரிவு-பி யின் கீழ் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தை விற்பனை செய்யவும், விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்த நிலையில், அதை அதிகாரபூர்வமாக அரசாணையாக நேற்று வெளியிட்டு, கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x