Published : 27 Mar 2020 11:55 am

Updated : 27 Mar 2020 11:55 am

 

Published : 27 Mar 2020 11:55 AM
Last Updated : 27 Mar 2020 11:55 AM

லாக் டவுனில் வீழ்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள்: டெல்லி அருகே நிழல் தந்து பசியாற்றும் உதவிக் கரங்கள்

organisations-lend-helping-hand-tomigrant-workers-labourers-amid-covid-19-lackdown
அலிகரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. | படம்: ஏஎன்ஐ

அலிகர்

நாட்டில் 21 நாள் லாக் டவுனை அடுத்து, தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கண்டறிந்து சில தன்னார்வ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டத் தொடங்கியுள்ளன.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று (மார்ச் 27) மூன்றாவது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.


கடந்த சில தினங்களாக, ஏற்பட்ட திடீர் நெருக்கடியால் எப்பொழுதும்போல இயங்கிவந்த தினக்கூலித் தொழிலாளர்கள் வேலையுமின்றி சாப்பாடுமின்றி தங்குவதற்கு இடமுமின்றி அல்லாடி வருகின்றனர்.

தினசரி ஊதியம் பெறுபவர்கள் வருமானமின்றி தவிப்பதைப் பார்த்த சில தன்னார்வ அமைப்புகள் அவர்களுக்குப் பசியாற்றுவதை முதற்கடமையாக செய்து வருகின்றன.

உணவு, தங்குமிடம்

டெல்லி அருகே இயங்கிவரும் 'மனவ் உப்கர் சான்ஸ்தா' மற்றும் 'ராதா சோமி சத்சங் பியாஸ்' போன்ற அமைப்புகள் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உணவு மற்றும் தங்குமிடம் அளித்து உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்த மாதிரி நேரங்களில் பசி என்ற நிலையைக் கடந்து நல்ல உணவு என்பதெல்லாம் எட்டாக்கனிதான். எனினும் ஃபிரோசாபாத்தில் இருந்து குடியேறிய தொழிலாளி வினோத் கூறுகையில், ''கடந்த மூன்று நாட்களாக நான் பசியுடன் இருந்தேன். இன்று மனவ் உப்கர் சன்ஸ்தாவின் சில தன்னார்வலர்கள் எனக்கும் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உணவு மற்றும் தங்குமிடம் பெற உதவினார்கள். நான் இத்தனை நாள் காத்திருந்தது குறைந்தபட்சம் இம்மாதிரியான அமைப்புகளின் உதவிக்காகத்தான்'' என்றார்.

நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், சரியான நேரத்தில் வீடு போய் சேர முடியாதவர்கள் ஏராளாமானவர்கள். அத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 'மனவ் உப்கர் சன்ஸ்தா' அமைப்பு அலிகரில் ஒரு தங்குமிடத்தையும் அமைத்துள்ளது.

இதுகுறித்து பேசிய மற்றொரு புலம்பெயர்ந்த தொழிலாளர் அங்கித் கூறுகையில், ''ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. சாலைகளில் பேருந்துகள் ஓடவில்லை. வீடு போய் சேர்ந்துவிட வேண்டும் என்று முயன்ற எனக்கு உரிய நேரத்தில் வீட்டிற்குச் செல்ல முடியாத நிலையே ஏற்பட்டது. நான் தற்போது மனவ் உப்கர் சன்ஸ்தாவின் தங்குமிடத்தில் தங்கியிருக்கிறேன். அங்கு எங்களுக்குப் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'' என்று கூறினார்.

இந்த அமைப்பு மேற்கொண்டுள்ள மனிதாபிமான முயற்சிகள் குறித்துப் பேசிய மனவ் உப்கார் சன்ஸ்தாவின் தலைவர் விஷ்ணு குமார் பாந்தி, '' இங்கே, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், டெல்லி மற்றும் காசியாபாத்தில் இருந்து நடந்து வரும் மக்களுக்கும் உணவு மற்றும் தங்குமிடம் வழங்குகிறோம். இப்போது வரை நாங்கள் குறைந்தபட்சம் 1,000 பேருக்கு உணவளித்துள்ளோம்'' என்றார்.

மூன்று நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு

மற்றொரு அரசு சாரா தொண்டு அமைப்பான ராதா சோமி சத்சங் பியாஸ் அமைப்பினர், உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலத்தையும் வழங்கத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து மத்தியப் பிரதேசத்தின் டிக்காம்கரில் இருந்து டெல்லிக்கு வந்த ஒரு தொழிலாளி கூறுகையில், ''கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் இருந்த என்னைப் போன்ற தினசரி கூலித் தொழிலாளர்கள் பலரும் இப்போது உயிர் வாழ்வதற்காக இந்த உணவுப் பொட்டலங்களையே நம்பியிருக்கிறார்கள். நாங்கள் பல நாட்களாக உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் இருந்தோம், ராதா சோமி சத்சங் பியாஸின் ஆதரவு எங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக வந்துள்ளது" என்றார்.

ராதா சோமி சத்சங் பியாஸ் அமைப்பின் ஏற்பாடுகள் குறித்து ஒரு தன்னார்வலரான நரேந்திர பாட்டி கூறுகையில், ''ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து சிலருக்கு உணவு கிடைகக வழி இல்லை என்பதை நாங்கள் அறிந்தோம், உடனடியாக அவர்களுக்கு வசதிகளை உருவாக்க முயற்சித்தோம். எங்கள் அமைப்பின் சார்பாக கடந்த மூன்று நாட்களில் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் கோவிட் -19 தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் எங்கள் அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது'' என்றார்.


தவறவிடாதீர்!

லேக்டவுன்புலம்பெயர் தொழிலாளர்கள்பசியாற்றும் உதவிக்கரங்கள்கரோனா வைரஸ்இந்தியாவில் கரோனா வைரஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x