Published : 27 Mar 2020 11:34 AM
Last Updated : 27 Mar 2020 11:34 AM

வைரஸால் வைரலான ஜவுளிக் கடை: இந்த கரோனா கதையே வேறு!

உலக நாடுகளையே அச்சத்தில் உறைய வைத்துக்கொண்டிருக்கிறது கரோனா. கேரளத்திலும் கரோனாவின் தாக்கம் எகிறிக் கொண்டிருக்கிறது. இந்தக் களேபரத்துக்கு நடுவில் எர்ணாகுளம்வாசிகளோ, கரோனாவோடு செல்ஃபி எடுத்து கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாமல் உடலில் நுழைந்து காவு வாங்கும் கரோனா வைரஸ் அல்ல இது. எர்ணாகுளம் அருகே உள்ள மூவாட்டுபுழா பகுதியில் உள்ள ஜவுளிக் கடைதான் இந்தக் ‘கரோனா’. கால் நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதியில் இயங்கிவரும் இந்தக் கடையின் பெயர் ‘கரோனா’ என்பதால், சமூக வலைதளங்களில் சமீபத்திய வைரலாகிவிட்டது கடை.

கரோனாவோடு செல்ஃபி எடுப்பதாக மலையாளிகள் கடைப் பக்கம் குவியத் தொடங்க, இத்தனை நாள் இல்லாத கூட்டத்தை ஆச்சரியம் விலகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் கடையின் உரிமையாளர் பரீத்.

''இந்தக் கடையைத் தொடங்கி 27 வருசம் ஆச்சு. கடைக்குக் ‘கரோனா’ன்னு பேர் வெச்சதுக்குப் பின்னால் ஒரு கதையே இருக்கு. இதுக்கு லத்தீன் மொழியில் ‘கிரீடம்’ன்னு அர்த்தம். எங்க கடையில் வடிவமைக்கும் சிறப்பு சட்டைகளிலும் இந்தப் பேரைதான் போட்டுட்டு இருக்கோம். இப்ப வேணா கரோனா உலகமே வெறுக்கும் பேரா இருக்கலாம். ஆனா, என்னை வாழவெச்சதே இந்தக் கரோனாதான்'' என நெகிழ்கிறார் பரீத்.

11-ம் வகுப்போடு படிப்புக்கு முழுக்குப் போட்ட இவர், தனது சகோதரரிடமிருந்து முறையாகத் தையல் கலையைக் கற்றுக்கொண்டவர். 1978-ல், ஒரே ஒரு தையல் மிஷின் கொண்டு தையல் தொழிலைத் தொடங்கியவர், தனது அயராத உழைப்பால் குறுகிய காலத்திலேயே அதிக எண்ணிக்கையில் தையல் கலைஞர்களைப் பணியமர்த்தி தையல்கூடமும் அமைத்தார். அது எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் போக, தன் கூடத்தில் உருப்பெற்ற காட்டன் சட்டைகளை ‘யாகா’, ‘கரோனா’ என்று இரண்டு பிராண்டுகளாகச் சந்தைப்படுத்தினார்.

அதில் கரோனா எர்ணாகுளம் பகுதிவாசிகளின் மனதில் இடம் பிடித்தது. அதன் மூலம் பொருளாதாரத்திலும் வலுவான பரீத், அதற்கு நன்றிக் கடனாகத்தான் தனது கடைக்கு ‘கரோனா’ என பெயர் வைத்திருக்கிறார்.

''1993-ல் ‘கரோனா’ டெக்ஸ்டைல்ஸைத் தொடங்கினேன். அப்போ இருந்தே என் வாழ்க்கையில் ஏறுமுகம்தான். இன்னைக்குக் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேசப்படுறதால, கடைக்குத் திடீர் விளம்பரம் கிடைச்சுடுச்சு. செல்ஃபி எடுக்க வர்றவங்கள்ல சிலர் கடைக்குள்ள வந்து ஆடைகளையும் வாங்கிட்டுப்போறாங்க.

நானும் என்னோட மனைவி, சுபைதாவும்தான் கடையில் இருக்கோம். இந்த ஊரில் என்னோட அடையாளமே ‘கரோனா’ தான். என் பேர் தெரியாத பலரும்கூட என்னைய ‘கரோனா’ன்னுதான் கூப்பிடுவாங்க. அதனால, இதே பெயரிலேயே தொடர்ந்து கடையை நடத்தணும்னு முடிவு செஞ்சிருக்கேன். மற்றபடி, கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள்ள வரணும்னு எல்லாரையும்போல நானும் பிரார்த்திக்கிறேன். வாடிக்கையாளர்களுக்காகக் கடையில் கை கழுவும் லோஷன் வாங்கிவெச்சிருக்கேன். முன்னெச்சரிக்கை அவசியம் இல்லையா'' என்று பொறுப்புடன் பேசுகிறார் பரீத்.

வெற்றியை நோக்கிய உழைப்புடன், முன்னெச்சரிக்கையும் அவசியம்தானே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x