Last Updated : 27 Mar, 2020 07:59 AM

 

Published : 27 Mar 2020 07:59 AM
Last Updated : 27 Mar 2020 07:59 AM

பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்திய மின் ஆளுகையால் கரோனாவை சமாளிக்கும் துறைகள்

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்திய மின் ஆளுகை திட்டத்தால் மத்திய அரசின் துறைகள், கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மிக எளிதாக சமாளித்து வருகின்றன.

கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு அலுவலகங்களில் அச்சுக் கோப்பு நடைமுறையே அமலில் இருந்தது. இதனால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தாள்கள் வீணாகி, கோப்புகளை பாதுகாப்பதும் பெரும் பிரச்சினையாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றார். அப்போது அச்சு கோப்பு நடைமுறையை கைவிட்டு, மின் ஆளுகைநடைமுறையை அவர் அமல் செய்தார். காகிதங்களுக்கு பதிலாகஇணைய வசதி கொண்ட கணினிகளில் கோப்புகள் சேமிக்கப்பட்டன.

மின் ஆளுகை திட்டத்தில், இ-மெயில் மூலம் கோப்புகளை படித்து பரிசீலனை செய்த அதிகாரிகள் உடனுக்குடன் உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இதனால் நேரமும் மிச்சமானது, அரசின் திட்டப் பணிகளும் வேகம்பெற்றன. மத்திய அரசின் அனைத்துதுறைகளிலும் படிப்படியாக மின்ஆளுகை திட்டம் அமல் செய்யப்பட்டது. இதற்கு அரசு அலுவலர்கள், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியப் பொறுப்பு வகிக்கும் உயர் அதிகாரிகள், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே திட்டப் பணிகளை விரைவுபடுத்தினர்.

தற்போது கரோனா வைரஸால் எழுந்துள்ள அச்சுறுத்தலால் அரசு,தனியார் துறை ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 50 சதவீத மத்திய அரசு ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்திய மின் ஆளுகை திட்டம்நல்ல பலனை அளித்து வருகிறது.எனினும் வீடுகளில் இருந்து பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்காக கணினிகளைப் பெறும் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய அரசு துறைகளின் உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறும்போது, "வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டிய அரசு ஊழியர்களுக்காக 3 வாரங்களுக்கு மடிக்கணினிகளை வாடகைக்கு பெற வேண்டும். மத்திய அரசு நாள் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய சுமார் ரூ.1,500-ல் நவீனபுதிய மடிக்கணினிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், மத்திய அரசின் பழைய விதிமுறைகளில் மடிக்கணினிகள் வாங்க அனுமதி இல்லை. அதை மாற்றி உத்தரவிட மத்திய நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

வீடுகளில் இருந்து பணியாற்ற மத்திய அரசின் உள்துறை, நிதித் துறை, வேளாண் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட சில துறைகள் மட்டுமே முக்கிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு துறைகளின் உயர் அதிகாரி, செயலர், இணை மற்றும் துணை செயலர், இயக்குநர் மற்றும்முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே மடிக்கணினிகள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றை அதே துறைகளில் உள்ள இதர அலுவலர்களுக்கு வழங்க முடியாது. சுமார்20 ஆண்டுகளுக்கு முன்பு வரையறுக்கப்பட்ட இந்த அரசு விதிமுறைகளின்படி இதர அலுவலர்களுக்கு ‘டெஸ்க்டாப்’ கணினிகள் மட்டுமே வழங்க முடியும்.

மத்திய அரசுக்கு விலைக்கும், வாடகைக்கும் விநியோகிக்க வேண்டி தனியார் நிறுவனங்கள், அரசு மின் சந்தையில் பதிவு செய்ய வேண்டும். மத்திய வர்த்தகத் துறையின் கீழ் செயல்படும் இதில் இடம்பெற்ற பல நிறுவனங்களுக்கு, ஊரடங்கு உத்தரவின் காரணமாகமடிக்கணினிகளை விநியோகிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தபிரச்சினைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x