

கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் 3 வாரங்களுக்கு நாடு தழுவியமுழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் பிஹார்மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை காரணமாக பலமாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். தற்போது முழு அடைப்புகாரணமாக அவர்களுக்குத் தேவையான உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின்னர் நிதிஷ்குமார் கூறும்போது, ‘‘மற்ற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பிஹார்தொழிலாளர்களின் செலவை,பிஹார் அரசே ஏற்கும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்’’ என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘கரோனா வைரஸை கட்டுப்படுத்த முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த நிதியில் ரிக்ஷாஓட்டுநர்கள், தினக் கூலி தொழிலாளர்கள் உட்பட வீடு இல்லாதவர்களுக்கு தங்குமிடம் அமைத்தல் போன்ற பணிகளை, பேரிடர் மேலாண்மைத் துறையினர் செய்வார்கள்’’ என்று தெரிவித்தார்.