

கரோனாவுக்கு எதிராக போராடுவது தொடர்பாக ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணையந்து செயல்படுவது தொடர்பாக ஜி-20 நாடுகளின் தலைவர்கள் இன்று காணொலிக் காட்சியி மூலம் உரையாடினர். டெல்லியில் இருந்து பிரதமர் மோடியும் இதில் பங்கேற்றார்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இணைந்து செயல்படுவது என ஜி 20 நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கொடிய பாதிப்பில் இருந்து மக்களை காக்க உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பை நாடுவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன் வழிகாட்டுதலின்படி மருந்துகள், நோய் கண்டறியும் கருவிகள், சிகிச்சை, தடுப்பு மருந்து, மற்ற மருந்துகள் போன்றவற்றை பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விநியோகிப்பது எனவும், இதில் பாதிப்பு குறைவான நாடுகள் அதிகஅளவில் உதவுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.