

குப்பைகளை அதற்குரிய குப்பைத் தொட்டிகளில் போட்டால், உடனே நமக்கு வை-ஃபை மூலம் இணைய வசதி கிடைக்கும். இது முற்றிலும் இலவசமானது என்பது குறிப்பிடத்தக்கது. குப்பையை தொட்டியில் போட்டவுடன் தொட்டியில் ‘கோட் நம்பர்’ தெரியும். அதன் மூலம் இலவச ‘வை-ஃபை’ இணைப்பு பெறலாம்.
மும்பையைச் சேர்ந்தவர் ப்ரதீக் அகர்வால். இவரது நண்பர் ராஜ் தேசாய். இவர்கள் இருவரும் இணைந்து 'வை-ஃபை டிராஷ் பின்' என்ற கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர். இதுகுறித்து ப்ரதீக் கூறியதாவது:
நாங்கள் இருவரும் டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்த அனுபவம் உடையவர்கள். அங்கெல்லாம் சாலைகளும், சுற்றுப்புறங்களும் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக இருப் பதைப் பார்த்தோம். அங்கு உள்ளது போன்று நம் நாட்டிலும் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு வடிவமைப்பிலும், மக்களின் மனப்பான்மையிலும் மாற்றத்தைக் கொண்டு வர நினைத்தோம்.
ஆனால் அதனை எப்படிச் செய்வது என்பது தெரியவில்லை. இந்நிலையில், நாங்கள் ஒரு முறை இசை விழா ஒன்றுக்குச் சென்றிருந்தோம். அங்கு சரியான சிக்னல் இல்லாததால், எங்களின் நண்பர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இணையம் வழியாகவும் தொடர்புகொள்ள முடியவில்லை. இறுதியில் அவர்களை 6 மணி நேரம் கழித்து கண்டுபிடித்தோம்.
அந்த இசை விழாவில், இசையுடன், உணவும் கிடைத்தது. அதேநேரம் அந்த இடம் முழுக்க குப்பைகளாலும் நிரம்பியிருந்தது. அப்போதுதான் எங்களுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.
இந்தக் குப்பைகளை அதற் குரிய குப்பைத் தொட்டிகளில் போட்டால், உடனே இலவசமாக வை-ஃபை வசதி கிடைக்கும்படி, ஒரு கண்டுபிடிப்பைச் செய்தால் நன்றாக இருக்குமே, என்ற யோசனையின் விளைவுதான் இந்த கண்டுபிடிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.