

கரோனா வைரஸ் தொற்று நோய் அறிகுறி இருப்பவர்கள் 14 நாட்கள் சுய தனிமைக்கு வீட்டில் இருக்க முடியாத சூழலில், அவர்கள் பணம் செலுத்தி சுய தனிமையில் இருப்பதற்காக 31 ஓட்டல்களை ஏற்பாடு செய்துள்ளது மேற்கு வங்க அரசு.
மேற்கு வங்கஅரசின் கோரிக்கையை ஏற்று, 31 ஓட்டல்களும் கரோனா அறிகுறியால் வருபவர்களை மட்டும் 14 நாட்கள் சுய தனிமையில் தங்கவைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இதற்காக கொல்கத்தாவின் ராஜர்காட், நியூடவுன் பகுதியில் 31 ஓட்டல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஓட்டல்களில் சுய தனிமைக்காகத் தங்குபவர்கள் பணம் செலுத்தித் தங்கிக் கொள்ளலாம்.
இதுகுறித்து கொல்கத்தா சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பி்ல் கூறுகையில், “கரோனா வைரஸ் தொற்றால் சுய தனிமைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை 14 நாட்கள் சுய தனிமையில் வைப்பதும், இட வசதி செய்து கொடுப்பதும் சவாலாக இருந்தது.
இதையடுத்து, நகரில் உள்ள பல ஓட்டல் உரிமையாளர்களிடம் பேசினோம். சுய தனிமைக்கு வருபவர்கள் மட்டும் தங்க அனுமதிக்க வேண்டும். மற்றவர்களைத் தங்க அனுமதிக்காதீர்கள் எனக் கேட்டுக்கொண்டோம். அதற்கு ஓட்டல் உரிமையாளர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
அந்த வகையில் மொத்தம் 31 ஓட்டல்களைத் தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொரு அறையிலும் கழிப்பறை இணைக்கப்பட்டிருக்கும். நல்ல காற்றோட்டமான இடத்தில் ஓட்டல் அமைந்துள்ளது. சுய தனிமைக்கு வருபவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும், சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதால், அதிகமான முக்கியத்துவம் அளித்து ஓட்டல் பராமரிக்கப்படுகிறது.
சுய தனிமையில் தங்குவோர் பயன்படுத்திய பொருட்கள், துண்டு, போர்வை அனைத்தையும் வேறு யாருக்கும் வழங்காமல் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். வெயிலில் உலர வைக்கப்படும். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். சுகாதாரத்துறையினர், மருத்துவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் தவிர யாரும் ஓட்டலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட 14 நாட்கள் சுய தனிமை முடிந்தபின் சுகாதாரத்துறையினர் உடல் பரிசோதனை செய்து, கரோனா நோய்த் தொற்று இல்லை என்று சான்று அளித்த பின்பே அவர் வெளியேற அனுமதிக்கப்படுவார்.
14 நாட்கள் சுய தனிமையின்போது குறிப்பிட்ட நபருக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக இருந்தால், ஓட்டல் நிர்வாகம் உடனடியாக மருத்துவமனைக்குத் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த 31 ஓட்டல்களையும் கண்காணிக்க தனியாக ஒரு மருத்துவ அதிகாரி நியமிக்கப்படுவார். அவர் சுய தனிமையில் இருக்கும் நபரின் உடல்நிலை ஆகியவற்றை அடிக்கடி பரிசோதனை செய்து கண்காணிப்பார்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.