

உலகமே கரோனா கவலையில் மூழ்கியிருக்க பாகிஸ்தான் ராணுவமோ காஷ்மீர் எல்லையில் மீண்டும் தனது வழக்கமான ஷெல் தாக்குதல் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் போர்நிறுத்த விதியை பாகிஸ்தான் மீறியுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவிலும் இந்த எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நேரத்திலும் பாகிஸ்தான் அரசு காஷ்மீர் எல்லையில் சண்டையை மீண்டும் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் எல்லைப் படை உயரதிகாரிகள் இன்று கூறியதாவது:
பாகிஸ்தானிய துருப்புக்கள் காஷ்மீர் எல்லைப் பகுதிகளை நோக்கி ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதன்மூலம் பாகிஸ்தான் அரசு போர்நிறுத்தத்தை மீறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை (ஐபி) வழியாக பாகிஸ்தான் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பன்சார், மன்யாரி ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடும் மற்றும் சக் சாங்கா பகுதிகளில் மோட்டார் ஷெல் தாக்குதலிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
போர்நிறுத்த விதி மீறல் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை இடைவிடாது தொடர்ந்தது.
எல்லையை பாதுகாக்கும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) துருப்புக்கள் போர் நிறுத்த மீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு திறம்பட பதிலடி கொடுத்தன.
இவ்வாறு காஷ்மீர் எல்லைப்படை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.