

கரோனை வைரஸை எதிர்த்து போராடி வரும் நிலையில் நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி செயல்படுத்தியது வரவேற்கக்கூடியதுதான், இதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர், 649 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸைத் தடுக்கும் போரில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவுக்கு ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்று, அறிக்கை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் லாக்-டவுன் நடவடிக்கைைய வரவேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர்மோடிக்கு சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் எனும் பெரும் தொற்று நோய் உலக நாடுகளை தீவிரமாக அச்சுறுத்தி வருகிறது, மக்களுக்கு உடல்நலக் கேடுகளையும், உயிர்பலியையும் ஏற்படுத்தி வருவது இந்தியாவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது
லட்சக்கண்ககான மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கவலைக்குள்ளாக்கி, குறிப்பாக சமூகத்தின் மிகவும் பலவீனமான பிரிவினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்து. கரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையுடன் இருந்து தோற்கடிக்க வேண்டும்.
இதற்காக பிரதமர் மோடி நாடுமுழுவதும் 21-நாட்கள் ஊரடங்கு கொண்டுவந்ததை நானும் காங்கிரஸ் கட்சியும் வரவேற்கிறோம். மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து பெருந்தொற்று கரோனாவை ஒழிக்க முயற்சிப்போம்.
இதுபோன்ற சவாலான, உறுதித்தன்மைஇல்லாத நேரத்தில் ஒவ்வொருவரும் சுயநலம் இன்றி நாட்டின் நலனுக்காகவும், கவுரத்துக்காகவும்,ம மனிதநேயத்துக்காகவும் எழுந்து நிற்பது கடமையாகும்.
பொருளாதாரம் சார்ந்த,மக்கள் நலன் சார்ந்த சில விஷயங்களை உங்களிடம் ஆலோசனையாக தெரிவிக்க விரும்புகிறேன். நம்சமூகத்தின் மிகவும் பலவீனமான பிரிவினரின் பொருளாதார ரீதியான வேதனைகளை, சந்திக்கும் உடல்ரீதியான பிரச்சினைகளை அடையாளம் காண இது உதவும் என நம்புகிறேன்
கரோனா வைரஸ் ஒழிப்பில் தீவிரமாக இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்பு உடைகள், என்95 முகக்கவசம், கிருமிகவச உடை போன்றவற்றை போதுமான அளவு வழங்கிட வேண்டும்.
மருத்துவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்களுக்கும் தேவைப்படும் முகக்கவசம், ஆடைகள் போன்றவை போதுமான அளவில் தயாராிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து, அது பற்றாக்குறை இல்லாமல் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு அதாவது மார்ச் 1-ம் தேதி முதல் சிறப்பு இடர் உதவித்தொகை வழங்கிட வேண்டும்.
கரோனாவின் பாதிப்பால் 21 நாட்களாக பல நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் முடங்கும். அவற்றை பாதுகாக்கும் வகையில், பரந்தநிலையில் சமூக பாதுகாப்பு திட்டங்களையும், ஏழை, எளிய மக்கள்,விவசாயிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றத்தையும் வழங்கிட வேண்டும். வங்கியில் கடன் பெற்றிருக்கும் விவசாயிகள், மாத ஊதியதாரர்கள் ஆகியோருக்கு தவணை செலுத்துவதில் சலுகை காட்ட வேண்டும்
இ்வ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்