

உ.பி.யைச் சேர்ந்த நொய்டா நகர மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வீடு தேடி வரும் வகையில் நகராட்சி ஆணையம் இன்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அவ்வகையில் வீட்டு விநியோகம் செய்ய உள்ளூர் சில்லறைக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார். வேகமாகப் பரவும் இந்த நோயை சமாளிக்க சமூக இடைவெளிதான் ஒரே வழி என்றும் என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருபக்கம் வெளியில் நடமாடினாலே போலீஸார் எச்சரித்து அனுப்பும் நிலையையும் பார்க்க முடிகிறது. இன்னொரு பக்கம் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைத் தேடி அலையும் நிலையும் சில இடங்களில் காணப்படுகிறது.
பிரதமரின் உத்தரவை நிறைவேற்றும் விதமாகவும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் செயல்படத் தொடங்கியுள்ளது நொய்டா நகராட்சி ஆணையம். ஃபரிதாபாத்துக்கும் காஸியாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் இடையில் அமைந்துள்ள உ.பி. நகரமான நொய்டா ஒரு ஸ்மார்ட் சிட்டியாகும். இது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.
நொய்டாவில் வசிக்கும் மக்கள் இப்போது அத்தியாவசியப் பொருட்களை தங்கள் வீட்டு வாசலில் பெற முடியும் என்ற நிலையை நொய்டா நகராட்சி ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. முறையான பாதுகாப்பு நெறிமுறையைப் பின்பற்றி நகரத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவுகளை நொய்டா நகராட்சி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிது மகேஸ்வரி வியாழக்கிழமை காலை நிறைவேற்றியுள்ளார்.
மேலும், பிராந்தியத்தின் பல துறைகளில் பல காய்கறி ஸ்டால்கள் அமைக்கப்படும். மேலும் நுகர்வோர் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தில் நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த கடைக்காரர்கள் சாலைகளில் இடங்களைக் குறிக்குமாறு நகராட்சி நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.