

நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிைலயில் அவர்களை சுய தனிமைப்படுத்தப் போதுமான இடம் இல்லாத நிலை இருக்கிறது. இதற்காக களத்தில் இறங்கியுள்ள ரயில்வே நிர்வாகம், ரயில் பெட்டிகளையும், கேபின்களையும் சுய தனிமைப்படுத்துதலுக்கான வார்டாக மாற்ற முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தவும், சமூக இடைவெளியை உருவாக்கவும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் மக்கள் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
இதுவரை 639 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோர், அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருப்போர் அதிகரித்து வருகின்றனர். அவர்களுக்குப் போதுமான இட வசதியில்லை.
இதையடுத்து இடங்களை வழங்கிட ரயில்வே முன்வர உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால் ஏப்ரல் 14-ம் தேதிவரை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் 13 ஆயிரத்து 523 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது காலியாக இருக்கும் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து ரயில்வே துறை வட்டாரங்கள் கூறுகையில், “ரயில்வேயில் காலியாக இருக்கும் பெட்டிகள், கேபின்கள் ஆகியவற்றை கரோனா வைரஸால் தனிமைப்படுத்தும் வார்டுகளாகப் பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், அனைத்து மண்டலங்களின் பொது மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் அனைவரும் சேர்ந்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பிரதமர் மோடி நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதன்பின்புதான் ரயில்வே துறை சார்பில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் யாதவ் பேசுகையில், “ரயில் பெட்டிகளை மருத்துவமனைகளாகவும், ஆலோசனை மையங்களாகவும், மருந்துகள் வைப்பறையாகவும், ஐசியு, உணவு வழங்கும் அறை என பலவாறாக மாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார். தேவைப்படும் பெட்டிகள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்” எனக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
இந்தியாவில் இப்போது இருக்கும் சூழலில் ஆயிரம் பேருக்கு 0.7 படுக்கை அதாவது ஒரு படுக்கை கூட இல்லை. உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையின்படி குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்கு 3 படுக்கையாவது தேவை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.