21 நாட்களில் என்ன செய்யப் போகிறீர்கள்? படிக்கும் பழக்கத்தை வளர்க்கலாமே; தமிழ் உள்பட 18 மொழிகளில் இலவசப் புத்தகங்கள் பதிவிறக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
2 min read

கரோனா வைரஸைத் தடுக்கும் போரில் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில், மக்கள் தங்கள் ஓய்வுக்காலத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க, தேசிய புத்தக அறக்கட்டளை தமிழ் உள்பட 18 மொழிகளில் தேர்ந்தெடுத்த சிறந்த புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதித்துள்ளது.

கரோனா வைரஸின் பிடியிலிருந்து நாட்டையும், மக்களையும் காக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் கரோனாவுக்கு பலி 13 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆகவும் அதிகரித்துள்ளது

இதையடுத்து, சூழலின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த 21 நாட்களை மக்கள் நல்ல வழியில் ஆக்கபூர்வமான வழியில் செலவிட வேண்டும். குழந்தைகளுக்குப் படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் எனும் நோக்கில் மத்திய மனித வளத்துறை அமைச்சகம், தேசிய புத்தக அறக்கட்டளை வாயிலாக இலவசப் புத்தகப் பதிவிறக்கத்தை அனுமதித்துள்ளது.

மக்கள் விரும்பிப் படிக்கும் வகையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 18 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 100 புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய அனுமதித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மக்கள் இந்த 21 நாட்களை பயனுள்ள வகையில் செலவழிக்க தேசிய புத்தக அறக்கட்டளை 18 மொழிகளில் இலவசமாகப் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்ய அனுமதித்துள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம், அசாமி, வங்காளம், குஜராத்தி, மலையாளம், ஒடியா,மராத்தி, கோக்போரக், மிசோ, போடோ, நேபாளி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், உருது, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் கதைகள், நாவல்கள், சுயசரிதைகள், புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆசியர்களுக்குப் பயனுள்ள வழிகாட்டல்கள், குழந்தைகள், இளைஞர்களுக்குத் தேவையான புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். (NBT) நேஷனல் புக் டிரஸ்ட் இணையதளத்தில் இந்தப் புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்

மகாத்மா காந்தி, தாகூர் போன்ற தலைவர்களின் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதிகமான புத்தகங்கள் சேர்க்கப்படும்.

ஹாலிடேஸ் ஹேவ் கம், அனிமல்ஸ் கான்ட் பர்கெட், நைன் லிட்டல் பேர்ட்ஸ், தி பஸில், காந்தி தத்து சங்கம், இந்தியாவில் பெண் ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் கற்றல், ஏ டச் ஆப் கிளாஸ், வாரியர்ஸ் ஆப் நான் வயலன்ஸ், உள்ளிட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இருக்கின்றன.

இத்தப் புத்தகங்கள் அனைத்தும் பிடிஎப் வடிவத்தில் இருக்கும் என்பதால், அதை வணிகரீதியாக யாரும் பயன்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in