மகாபாரத போருக்கு 18 நாட்கள்; கரோனா போரில் வெல்ல 21 நாட்கள் தேவை: பிரதமர் மோடி

மகாபாரத போருக்கு 18 நாட்கள்; கரோனா போரில் வெல்ல 21 நாட்கள் தேவை: பிரதமர் மோடி
Updated on
1 min read

மகாபாரத போரில் வெற்றி பெற 18 நாட்கள் தேவைப்பட்டது, கரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல 21 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசி மக்களுடன் காணொலியில் இன்று உரையாடினார். அந்த தொகுதியை சேர்ந்த சிலர் காணொலி மூலம் பிரதமர் மோடியுடன் இன்று உரையாடினர். அவர்கள் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காரோனாவை எதிர்கொள்ள நாம் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம். இந்த 21 நாட்கள் என்பது மிக முக்கியமானது. இந்த நாட்களில் நாம் கவனத்துடன் இருந்தால் மட்டுமே கரோனாவை நாம் வெற்றி பெற முடியும். நமது நாட்டை விட்டு விரட்ட முடியும்.

கரோனாவை விரட்டுவதற்காக நாம் நடத்திய மக்கள் ஊரடங்கிற்கு நாடுமுழுவதும் ஆதரவு கிடைத்தது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மக்கள் கரவொலி எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இதே ஆதரவை நாம் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும். ஊரடங்கை கடுமையாக கடை பிடிக்க வேண்டும்.

ஒத்துழைக்காதவர்கள், விதியை மீறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன். மகாபாரத போரில் வெற்றி பெற 18 நாட்கள் தேவைப்பட்டது, கரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல 21 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in