

கரோனா வைரஸுக்கு எதிராக தேசம் நடத்தும் போரில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிரதமர் மோடியின் முடிவு வரலாற்றுத் திருப்புமுனையானது. பிரதமர் மோடி படைத்தலைவர், மக்கள் அவரின் படை வீரர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் புகழாரம் சூட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கரோனா வைரஸ் தாக்கத்தால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் செயல்படுத்தும்போது பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்படும். அதைச் சரிகட்ட ப.சிதம்பரம் 10 வகையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
ஆனால், பிரதமர் மோடியைப் பாராட்டி ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை என்பது அவரின் தனிப்பட்ட கருத்து , அதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸிலிருந்து நாட்டையும் , மக்களையும் காக்க மிகப் பெரிய முடிவை எடுக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தொடர்ந்து கடந்த வாரங்களில் வலியுறுத்தி வந்தார். பிரதமர் மோடி நேற்று இந்த முடிவை அறிவித்தவுடன் அவர் ட்விட்டர் வாயிலாக மோடிக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்த சூழலி்ல ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தது வரலாற்றுத் திருப்புமுனையான முடிவு. இந்த நேரத்தில் நாம் இதற்கு முன் செய்த விவாதங்களை, விமர்சனங்களைப் பின்னுக்குத் தள்ளிவைக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் நாமெல்லாம் படை வீரர்களாக இருப்போம். மோடி படைத் தலைவராகச் செயல்படுவார்.
பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமையாகும்.
கரோனா வைரஸின் தாக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்தைச் சிக்கலில் இருந்து மீட்க 10 வகையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன். இதை அரசு பரீசலனைக்கு எடுத்துக்கொண்டு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இன்றைய சூழலில் ஏழை மக்கள் கையில் உடனடியாகப் பணத்தை வழங்க வேண்டியது அவசியமாகும்.
ஏழைகள், விளிம்பு நிலை மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோரின் வங்கிக் கணக்கில் உடனடியாகப் பணம் செலுத்த வேண்டும். அனைத்து வகையான பொருட்கள், சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்துள்ளாகக் கொண்டுவந்து ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நுகர்வை அதிகப்படுத்த வேண்டும்.
இந்தத் திட்டங்கள், ஆலோசனைகள் அனைத்தும் தற்போதுள்ள சூழலுக்காகனவை. மக்கள் கைகளில், குறிப்பாக ஏழை மக்கள் கைகளில் அதிகமான பணம் புழங்கும்போது பொருளாதாரம் மேல் எழும்பும். வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் இருக்கம் மக்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பதுதான் உடனடி சவால். அடுத்தடுத்த நாட்களில் அடுத்துவரும் சவால்களை அடையாளம் காண்போம்.
மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே இருங்கள். ஸ்டே ஹோம் இந்தியா என்ற வாசகம் மிகப்பெரிய பேரணியாகும்''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.