கேரளா லாக்-டவுன் 2வது நாளில் மேலும் 50 பேர் மீது வழக்கு: போலீஸார் தீவிர கண்காணிப்பு- வாக்குவாதம் செய்யும் குடிமக்கள்

கேரளா லாக்-டவுன் 2வது நாளில் மேலும் 50 பேர் மீது வழக்கு: போலீஸார் தீவிர கண்காணிப்பு- வாக்குவாதம் செய்யும் குடிமக்கள்
Updated on
1 min read

கேரளாவில் 2வது நாளாக பொது ஊரடங்கு இருந்து வரும் நிலையில் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்ததாக 50 பேர் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகனத்தில் செல்பவர்கள் போலீசாருடன் ஆங்காங்கே வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காண முடிகிறது. முறையான ஆவணங்களுடன் வெளியே செல்வதற்கான முறையான காரணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது.

புதன் கிழமை காலை மாநிலத்தில் உள்ள அனைத்து சில்லரை விற்பனை மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. மதுபானங்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து டோர் டெலிவரி செய்யலாமா என்பதையும் கேரளா பரிசீலித்து வருகிறது.

லாக்-டவுன் உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாய்ம் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். லாக் டவுனை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை, வழக்கமான ஹர்த்தால் போன்று நினைத்துக் கொண்டு மீறிவருகின்றனர், உண்மையான அபாயம் இவர்களுக்குப் புரியவில்லை என்ரு மாநில தேவசம்ஸ் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று கேரளா போலீஸ் தலைமை அலோக்நாத் பேஹ்ரா தெருக்களில் இறங்கி மக்களுக்கு அறிவுரை வழங்கினார். புதன் முதல் லாக்-டவுன் இன்னும் கண்டிப்புடன் அரங்கேற்றப்படும் என்று அவர் எச்சரித்தார்.

கொல்லத்தில் சாலையில் சென்ற ஒருநபரை போலீஸார் மடக்கியபோது உறவினர் ஒருவர் இறந்து விட்டார் அதற்காகச் செல்கிறேன் என்று கூறியுள்ளார், போலீஸார் உடனே தொலைபேசி நம்பரை கொடுங்கள் என்று கூற போலீஸ் தொலைபேசி செய்த போது யாரை அவர் செத்துப் போய்விட்டார் என்று கூறினாரோ அவரே போனை எடுத்துப் பேசினார். இதனையடுத்து அந்த நபர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

திருச்சூரில் ட்ரோன்கள் மூலம் ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டது. கேரளாவில் தற்போது 11,000 கரோனா கேஸ்கள் இருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in