21 நாள் ஊரடங்கு; மக்களுக்கு ஆறுதல் செய்தி: வங்கிக் கடனுக்கான இஎம்ஐ செலுத்துவதில் சலுகைகள் - ரிசர்வ் வங்கி ஆலோசனை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸை எதிர்க்கும், தடுக்கும் போராட்டத்தில் ஏராளமான துறைகள் மூடப்படும் சூழலில், அவற்றின் வருவாய் கடுமையாகப் பாதிக்கும். இதைக் கருத்தில் கொண்டு வங்கியில் பெற்ற கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்துவதில் சில சலுகைகளை ரிசர்வ் வங்கி விரைவில் அறிவிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுதைத் தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த 21 நாட்களில் ஏராளமான நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடும், வர்த்தகம், தொழில், நிறுவனங்களின் பரிவர்த்தனை முடங்கும் சூழல் ஏற்படும். இருப்பினும் மக்கள் சிரமத்தை தாங்கிக்கொண்டு, 21 நாட்களைக் கடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இந்த 21 நாட்களில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள், சுயதொழில்செய்வோர், வீடுகட்ட கடன் பெற்றோர் ஆகியோர் வருமானம் ஈட்டுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள். வங்கியில் பெற்ற கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்துவதிலும் சிரமங்கள் நேரலாம். இதைத் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி சில சலுகைகளை அறிவிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடன் செலுத்துவதில் சிரமம் ஏற்படும். ஆதலால், சலுகைகள் தேவை என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியும் இதைக் கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது. இந்திய வங்கிகள் கூட்டமைப்பும் இதே கோரிக்கையை வைத்துள்ளன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியிடும்” எனத் தெரிவித்தார்.

இதன்படி வங்கியில் கடன் பெற்றவர்கள் தங்களின் இஎம்ஐ தொகையை செலுத்தக் கால நீட்டிப்பு வழங்கப்படலாம், அல்லது வட்டி தள்ளுபடி செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவி்க்கின்றன.

மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு அடுத்த 3 மாதங்களுக்கு எந்த ஏடிஎம் மையத்தில் சென்று பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று எஸ்பிஐ வங்கியும் விதிகளை ஏற்கெனவே தளர்த்தியது.

வர்த்தகம் செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், சிறு, குறு தொழில்கள் நடத்துபவர்கள் கரோனா வைரஸ் காரணமாக தொழில் ஏறக்குறைய பாதி முடங்கிவிட்டது. இப்போது 21 நாட்கள் ஊரடங்கில் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவ்அஞ்சுகிறார்கள். தொழிலுக்காகவும், வாகனங்களுக்காகவும் பெற்ற கடனுக்கான மாதத் தவணையை எவ்வாறு செலுத்துவது என்றும் கவலையுடன் இருக்கிறார்கள். இவர்களின் கவலையைப் போக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் சலுகை அறிவிப்புகள் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in