Last Updated : 25 Mar, 2020 10:19 AM

 

Published : 25 Mar 2020 10:19 AM
Last Updated : 25 Mar 2020 10:19 AM

21 நாள் ஊரடங்கு; ஏப்ரல் 14-ம் தேதி வரை அனைத்துப் பயணிகள் ரயில்களும் ரத்து: புறநகர் சேவையும் இருக்காது

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று பிறப்பித்ததையடுத்து, ஏப்ரல் 14-ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவையை நிறுத்துவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

அதேசமயம், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் சரக்கு ரயில் போக்குவரத்து தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக கடந்த 22-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் நிறுத்தப்படுவதாக ரயில்வே துறை அறிவித்தது. பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், பிடித்தம் இல்லாமல் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த சூழலில் கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி பிறப்பித்தார். மக்கள் அனைவரும் தங்களின் குடும்ப நலனுக்காக, வீட்டை விட்டு வெளிேயறாமல் இருக்க வேண்டும், ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு அளிக்கவும் கோரினார்.

இதையடுத்து, பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து ஏப்ரல் 14-ம் தேதி வரை அனைத்துப் பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. பெருநகரங்கள் அனைத்திலும் புறநகர் ரயில்களும் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஜூன் 21-ம் தேதி வரை முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டுகளை ரத்து செய்து கட்டணத்தைத் திரும்பப் பெறலாம்.

ரயிலில் பயணிக்க முடியாமல் ரயில் நிலையங்களில் உள்ள காத்திருப்பு அறைகளில் இருக்கும் பயணிகளுக்காக காத்திருப்பு அறைகள் செயல்படும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்குப் போக்குவரத்து தொடர்ந்து செயல்படும். அதில் தடையிருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ரயில்வே துறை நேற்று வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், “தங்களின் உற்பத்தி தொழிற்சாலையில் மருத்துவமனைக்குத் தேவையான கட்டில்கள், சுயதனிமைக்கான வசதிகள், உள்ளிட்ட பொருட்களைத் தயார் செய்தவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்து அதை உற்பத்தி செய்து வழங்கும். கரோனாவுக்கு எதிராகப் போராடும்'' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x