

ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம், எனவே அடுத்து 21 நாட்கள் அமலில் இருக்கும், ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
உலக அளவில் நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 பேரை தாண்டி விட்டது.
இதனால், தீவிரத்தை உணர்ந்ததால் 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதைச் செயல்படுத்தியபின்புதான் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுத்தி வருகின்றனர். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.
அவர் தனது உரையில் கூறியதாவது:
மீண்டும் ஒருமுறை கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது.
குழந்தைகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து கரோனாவை எதிர்கொள்ள வேண்டும். மக்கள் ஊரடங்கின் மூலம் இந்திய மக்கள் கரோனா வைரஸை் எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை உலகம் அறிந்து கொண்டது.
எந்த தடை வந்தாலும் மனித குலத்திற்காக ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
ஊரடங்கு உத்தரவை வெற்றிகரமாக நடத்தி காட்டிய மக்களுக்கு நன்றி. வைரஸ் பரவுவதை எதிர்த்து இந்தியா வலிமையாக போராடும் என உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.
அடுத்த 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது உங்களை, உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம். எனவே ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைக்க வேண்டும். பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. எனக்கு மக்களின் பாதுகாப்பே முக்கியம்.
உறவினர்கள் உள்பட வெளிநபர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். மக்கள் சுய கட்டுப்பாடுடன் இல்லையென்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும்.
கரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். காட்டுத்தீ போல கரோனா வேகமாக பரவி வருகிறது. அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும். இதன்மூலம் கரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். கரோனா பரவத் தொடங்கினால், அதை தடுத்து நிறுத்துவது பெரிய சவால்.
சேவைத் துறையில் பணியாற்றுவோரை கையெடுத்து வணங்குங்கள். ஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு இணைந்திருங்கள்.
இந்த தேசிய பேரிடரை குறைக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. அமைதியும் பொறுமையும் காக்க வேண்டிய தருணம் இது. ஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு இணைந்திருங்கள். தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், நீ்ங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள். கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
ஏராளமானோர் உதவுவதற்கு முன்வந்து கொண்டு இருக்கிறார்கள். உலக சுகாதார மையத்தின் ஆலோசனைப்படி, மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. கரோனாவை எதிர்கொள்ள ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நமது ஒற்றுமையையும், உறுதியையும் காட்ட வேண்டிய தருணம் இது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.