69,000 பேரை வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்; வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால்தான் கரோனா பரவுகிறது: உள்துறை இணையமைச்சர் தகவல்

மத்திய உள்துறைஇணையமைச்சர் கிஷன் ரெட்டி : படம் | ஏஎன்ஐ.
மத்திய உள்துறைஇணையமைச்சர் கிஷன் ரெட்டி : படம் | ஏஎன்ஐ.
Updated on
1 min read

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களில் 69 ஆயிரம் பேரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் மூலம்தான் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா வைரஸ் பரவுகிறது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி கிசான் ரெட்டி தெரிவித்தார்.

மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கொடூரமான கரோனா வைரஸ் நோயை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். ஏனென்றால் வல்லரசு நாடுகளான அமெரிக்காவால் கூட கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பரவியுள்ளது. தொழில்நுட்பமும் வளங்களும் அங்கு அதிகமாக இருந்தும் கரோனாவைத் தடுக்க முடியவில்லை.

நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் இதுவரை 15.24 லட்சம் மக்களை சோதனை செய்துள்ளோம். அதில் 69,436 பேரை மருத்துவர்கள் ஆய்வு செய்து வீடுகளுக்குச் சென்று சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார்கள்.

இதுவரை வெளிநாடுகளில் இருந்து கரோனா பாதிப்புடன் இந்தியாவுக்கு வந்தவர்கள் மூலம்தான் அவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் பரவுகிறது. ஆதலால், முன்னெச்சரிக்கை மக்களுக்கு அவசியம். இந்த நோயை மிகவும் கவனக்குறைவாக எடுக்காமல், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறாமல், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒரே வழி அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மக்கள் நடப்பதுதான். 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளன.

வளர்ந்த நாடுகளால்கூட கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தாலியில் ஆயிரம் பேராக இருந்தநிலையில் ஒரு மாதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரமாக அதிகரித்தது.

அமெரிக்காவிலும் 4 ஆயிரமாக இருந்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆயிரமாக ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை குறைவு, நல்ல மருத்துவ வசதிகள் இருக்கிறது, சிறந்த வளங்கள் இருந்தும் தடுக்கமுடியவில்லை.

உலகப் போர்கள் நாடுகளுக்கு இடையேதான் நடந்தன. ஆனால், இப்போது அவசரப் போரை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டுக்குள்ளே நடத்துகிறார்கள். நம்மையும், உறவினர்களையும், சுற்றத்தாரையும் கரோனாவினால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். இது உலகப் போரைக் காட்டிலும் மிகப்பெரியது''.

இவ்வாறு அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in