

கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவி்ல்லை. இருப்பினும் நம் முன் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில் 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வெளியே நடமாடாமல் வீட்டுக்குள் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமூக இடைவெளி மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸ் தாக்கத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணக்கை 500-ஐ நெருங்குகிறது.
டெல்லியில் ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது வரும் 31ம்- தேதி வரை நடைமுறையில் இருக்கும். டெல்லியில் கரோனா வைரஸுக்கு 30 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், 5 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவி்ல்லை. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில், “டெல்லி மாநிலத்தில்கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் ஒருவர் கூட புதிதாகப் பாதிக்கப்படவி்ல்லை என்பதைத் தெரிவிக்கிறேன்.
கரோனா வைரஸ் நோயில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதற்காக நாம் இப்போது மகிழ்ச்சியடைக் கூடாது. மிகப்பெரிய சவால் இப்போது இருக்கிறது. இன்னும் சூழல் மாறவில்லை. நமது கட்டுப்பாட்டில் இல்லை. மக்களாகிய நீங்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.