

கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளாலும், பல்வேறு மாநிலங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாலும், மாநிலங்களவைத் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்களுக்கு மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் 55 இடங்களில் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 37 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 18 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட இருந்தது. இவர்களின் பதவிக்காலம் வரும ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவதால் அதற்குள் தேர்தலை நடத்த வேண்டியிருந்தது.
இந்நிலையில் கரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 500 பேரை நெருங்கிவிட்டது, உயிரிழப்பும் 9 ஆக அதிகரி்த்துவிட்டது. இதனால் தடுப்பு நடவடிக்கைளை ஒவ்வொரு மாநிலமும் தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனால் திட்டமிட்டபடி வரும் 26-ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் 18 இடங்களுக்கு நடக்க இருக்கும் மாநிலங்களைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 18 இடங்களில் குஜராத், ஆந்திராவில் தலா 4 இடங்கள், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் தலா 3 இடங்கள், ஜார்க்கண்டில் 2 இடங்கள், மணிப்பூர், மேகாலாயாவில் தலா ஒரு இடத்துக்குத் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.