Published : 24 Mar 2020 08:56 AM
Last Updated : 24 Mar 2020 08:56 AM

கரோனா முடக்கத்தால் பெங்களூருவில் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளர்கள், ஏழைகளுக்கு இந்திரா உணவகத்தில் இலவச உணவு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

இரா.வினோத்

கரோனா வைரஸ் பாதிப்பினால் பெங்களூரு முடக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி கூலித் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு இந்திரா கேண்டீன் மூலம் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூருவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மார்ச் 31ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், மளிகை கடைகள், காய்கறி பழக் கடைகள் உள்ளிட்டவை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நியாய விலை கடைகள் மூலம் 2 மாதங்களுக்கு தேவையான‌ ரேஷன் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால் கூலித் தொழிலாளர்கள், ஏழைகள், முதியவர்கள் அன்றாட உணவுக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை தவிர்க்கும் விதமாக பெங்களூரு மாநகரில் உள்ள 191 இந்திரா கேண்டீன் (அரசின் மலிவு விலை உணவகம்) மூலம் காலை, மதியம் மற்றும் இரவு உணவு இலவசமாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 31-ம் தேதி வரை தொழிலாளர்கள், ஏழை மக்கள் இந்திரா உணவகத்தில் இலவசமாக உணவு உண்ணலாம்.

9 மாவட்டங்களில்

சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பரிமாறப்படும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள‌ மைசூரு, குடகு, மங்களூரு உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் இலவசமாக‌ உணவு வழங்குவது குறித்து அமைச்சர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகள், சோதனை மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முதல்வர் எடியூரப்பா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x