

என்.மகேஷ்குமார்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது அதன் வரலாற்றிலேயே 2வது முறையாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 1892-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி வியாழக் கிழமை, மற்றும் 6-ம் தேதி வெள்ளிக் கிழமை, ஆகிய இரண்டு நாட்கள் கோயில் அடைக்கப்பட்டது.
இதற்கான காரணங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பதிவேட்டில் பதிவு செய்துள்ளது. அந்த காலகட்டத்தில் மகந்துக்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலை பராமரித்து வந்தனர். ஆகம சாஸ்திரங்கள்படி கோயில் பூஜைகள் நடைபெற்று வந்தது. இதற்காக பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் மகந்துக்களுக்கும், ஜீயர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த இரு நாட்களும் கோயில் நடை அடைக்கப்பட்டது என பதிவேட்டில் உள்ளது. இதுகுறித்து கடந்த 1892 மே மாதம் 9-ம் தேதி ‘தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் நான்காம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த கால கட்டங்களில் பக்தர்கள் அலிபிரி மற்றும் வாரி மெட்டு வழியாகவே ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று தரிசித்து வந்தனர். மேலும் வாகன போக்குவரத்துகளும் இல்லாததால் முதியோர் டோலி மூலம் சுவாமியை தரிசித்து வந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சுமார் 128 ஆண்டுகள் கழித்து தற்போது மக்கள் அலைமோதும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 2-வது முறையாக தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோயிலில் தரிசனம் நிறுத்தப்பட்டாலும் ஏழுமலையானுக்கு அதிகாலை சுப்ரபாத சேவை முதல் இரவு ஏகாந்த சேவை வரை அனைத்து சேவைகளும் ஏகாந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோயிலுக்குள் மக்கள் நலனுக்காக பல்வேறு யாகங்களும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
பக்தர்களுக்காக உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒரு வார காலம் வரை தரிசனங்களை ரத்து செய்கிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தற்போது வரும் வியாழக்கிழமை வரை இந்த நிலை நீடிக்கும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் விதித்துவரும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கான தடை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.