

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில எரிசக்தித் துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா போபாலில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பந்த்வார் பகுதி ரேவா மாவட்டம், குட் பகுதியில் சுமார் 1500 ஹெக்டேர் நிலத்தில் புதிதாக சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இது 750 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும்.
இத்திட்டத்தை செயல்படுத்த விரைவில் சர்வதேச ஒப்பந்தம் வெளியிடப்படும். அதில் தகுதியுள்ள நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணி ஒப்படைக்கப்படும். வரும் 2017 மார்ச் முதல் சூரிய மின்உற்பத்தி நிலையம் செயல்படத் தொடங்கும்.
தற்போது உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மொஜாவி பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த மின் உற்பத்தி நிலையத்தின் திறன் 392 மெகாவாட் ஆகும்.
குட் பகுதி சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் திறன் 750 மெகாவாட் ஆகும். இந்த மின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் என்ற பெருமையைப் பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.