

மக்களவையில் நிதிமசோதா 40 திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேறியது. இதையடுத்து, அவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்
2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு முதல் அமர்வு கடந்த பிப்ரவரி 11-ம் தேதியுடன் முடிந்தது.அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2 தொடங்கி நடந்து வருகிறது. கரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, கூட்டத்தொடரை ஒத்திவைக்கக் கோரி பலமுறை எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார். ஆனால் தற்போது கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால் எம்.பி.க்கள் தங்கள் தொகுதிக்குச் சென்று பணிகளை பார்வையிட வேண்டியகட்டாயம் ஏற்பட்டது. இந்த சூழலி்ல் இன்று மக்களவை கூடியது.
கரோனா வைரஸ் பரவலால் நாடு அசாதாரண சூழலில் இருப்பதால், 2020-ம் நிதியாண்டுக்கான நிதி மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 40 திருத்தங்களுடன் கூடிய நிதிமசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகக்கூறிய சபாநாயகர் ஓம் பிர்்லா நிதி மசோதா நிறைவேறியதாக அறிவித்தார். சில திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்.பி. டிஆர் பாலு ஆகியோர் எழுந்து பேசினர். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தொழில்கள், நிறுவனங்கள், துறைகள் ஆகியவற்றுக்கு பொருளதார சலுகை என்ன அறிவிக்கப்பட உள்ளது எனக் கேட்டனர்.
அப்போது உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி எழுந்து ராஷ்ட்ரிய ரக்சா பல்கலைக்கழக மசோதா, தேசிய தடவியல்அறிவியல் பல்கலைக்கழக மசோதா ஆகியவற்றைத் தாக்கல் செய்தார். ஆனால், இந்த மசோதாவின் நகல்கள் தங்களுக்கு கிடைக்காமல் எவ்வாறு தாக்கல் செய்ய முடியும் எனக் கேட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபின், நக்சலைட் தாக்குதலில் மரணமடைந்த 17 பாதுகாப்புப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், “ கரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும். நிதி மசோதாக்கள் விவாதமின்றி அனைத்துக்கட்சி கூட்டத்தின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைக்கிறேன்” எனத் தெரிவித்தார்
திட்டமிட்டபடி பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 3-ம் ேததி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. கரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கி இருப்பது, எம்.பி.கள் தங்கள் தொகுதிக்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் பங்கேற்றிருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும், 19 மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, 80மாவட்டங்கள் லாக்டவுன் செய்யப்பட்டன. இதனால் அசாதாரண சூழல் நிலவுவதால், பட்ஜெட் கூட்டத்தொடர் 12 நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட்டது