

கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்தையும் நாளையுடன் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி மக்கள் தாமாக முன்வந்து நேற்று சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக நாடுமுழுவதும் 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கரோனா தொற்று அதிகம் பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்து நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்தையும் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாளை (செவ்வாய் கிழமை) இரவு 11.59 மணிக்குள் அனைத்து விமானங்களும் அதன் இடங்களுக்கு சென்று விட வேண்டும், அதற்கு பிறகு பயணிகள் விமானம் ஏதும் இயக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பன்னாட்டு விமான சேவை ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சரக்கு விமானங்கள் மட்டும் இயக்கப்படும்.