

உத்தர பிரதேசத்தில் மக்கள் சுய ஊரடங்கு நேற்று அமலில் இருந்தபோது எச்சரிக்கையை மீறி வெளியே வந்தவர்களுக்கு, போலீஸார் சமூகத்தின் எதிரி நான் என்ற துண்டு பிரசுரத்தை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி மக்கள் தாமாக முன்வந்து நேற்று சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்தினர். ஆனால் பல மாநிலங்களில் சிலர் எச்சரிக்கையையும் மீறி அத்துமீறி வெளியே வந்தனர்.
குறிப்பாக இளைஞர்கள் சிலர் தடை நேரத்தில் வெளியே செல்வதை சாகசமாக கருதி வெளியே சென்றனர். பலர் குழுவாக சென்று செல்பி எடுத்த வண்ணம் இருந்தனர். இதுபோன்றவர்களை போலீஸார் ஆங்காங்கே எச்சரித்து அனுப்பினர்.
ஆனால் உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் போலீஸார் சற்று வித்தியாசமாக துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில் ‘‘நான் சமூகத்தின் எதிரி; நான் வீட்டில் இருக்க மாட்டன்’’ என அச்சிடப்பட்டு இருந்தது.
அத்துமீறி இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் அவர்களிடம் இந்த துண்டு பிரசுரத்தை கொடுத்து வாசிக்குமாறு கூறினர். மேலும் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.