

கரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை,குறிப்பாக லாக்-டவுனை தீவிமாக எடுக்கவில்லை. உங்களையும், குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
இருப்பினும் கரோனா வைரஸின் தாக்கத்துக்கு இந்தியாவில் 390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிர்பலியும் 8 ஆக அதிகரித்துவிட்டது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் மக்கள் ஊரடங்கை நேற்று செயல்படுத்த பிரதமர்மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு நாடுமுழுவதும் வரவேற்பு இருந்தபோதிலும் மக்கள் அதை இன்னும் தீவிரமாக கடைபிடிக்கவில்லை. கரோனா வைரஸ் குறித்த தீவிரத்தையும் மக்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
இதையடுத்து, பிரதமர் மோடி ட்விட்டரி்ல் மக்கள் கரோனா குறித்து தீவிரமாக எடுக்காதது குறித்தும், அதேசமயம், லாக்டவுனை மாநில அரசுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் பதிவிட்ட ட்விட்டர் கருத்தில், “ கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளில் ஒன்றான லாக்-டவுனை(கடும் கட்டுப்பாடுகள்) பெரும்பாலான மக்கள் தீவிரமாகக் கருதவில்லை.
மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றி தயவு செய்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். லாக்-டவுன் நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்ைக கடுமையாகப் பின்பற்றி நடைமுறைப்படுத்தி மக்களை கட்டுக்குள் வைக்க மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் 80 மாவட்டங்களில் லாக்-டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று காலை 6மணி முதல் 31-ம் தேதி இரவுவரை லாக்-டவுன் தீவிரமாகச் செயல்படுத்தப்பட உள்ளது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம், கேரளாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் லாக்-டவுன் தீவிரமாக நிறைவேற்றப்பட உள்ளது.