

மூச்சுத் திணறல், காய்ச்சல், தொண்டை வலி ஆகிய அறிகுறிகளுடன் 70 வயது முதியவர் ஒருவர் மும்பையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது கரோனா அச்சத்தினா அவருக்கு அந்த மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்தது சர்ச்சையாகியுள்ளது.
இந்த அறிகுறிகள் கரோனா வைரஸ் அறிகுறிகள் போல் தெரிந்ததால் மும்பையில் உள்ள இந்துஜா தனியார் மருத்துவமனை முதியவரை சேர்க்க மறுத்ததாக முதியவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
சுமார் ஒருமணி நேரம் ஜுரம், மூச்சுத் திணறலுடன் தன் தந்தையை வாகனத்திலேயே காக்க வைத்தனர் என்றும் பிறகு ‘பாதுகாப்பு அறை’க்கு அழைத்து சென்று ஐ.வி ப்ளூயிட்ஸ் அளித்ததாகவும் அவரது மகன் தெரிவித்தார். இந்த பாதுகாப்பு அறை மருத்துவமனைக்கு வெளியே செக்யூரிட்டி கார்டுகள் அமர்ந்திருக்கும் அறைக்கு அடுத்ததாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸை அழைத்த போது ஆம்புலன்ஸ் ட்ரைவர் வண்டியை எடுக்க மறுத்தார்.
இது குறித்து நோயாளியின் 26 வயது மகன் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்த போது, “என் தந்தைக்கு மூக்கடைப்பு, காய்ச்சல், இருமல் இருந்து வந்தது, இதனையடுத்து அவரை கல்யாணில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். அவர்கள் கோவிட்-19 ஆக இருக்கலாம் என்று ருக்மணி பாய் மருத்துவமனைக்கு அனுப்பினர், அங்கு போனால் அவர்கள் ஊசி மருந்து கொடுத்து கஸ்தூரிபா மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறினர்.
இந்துஜா மருத்துவமனையில் என் தந்தையை அனுமதிக்க மறுத்தனர், நான் கஸ்தூரிபா மருத்துவமனை தந்தைக்கு அளித்த மருத்துவ அறிக்கையையும் காட்டினேன், ஆனால் கோவிட் 19 ஆக இருக்கலாம் என்று என் தந்தையை சேர்க்க மறுத்தனர். பிறகு கே.இ.எம் மருத்துவமனையில் அவருக்கு நிமோனியா இருப்பது தெரியவர சிகிச்சை தொடரப்பட்டது” என்றார்.
கரோனா தொற்று அச்சுறுத்தலினால் தனியார் மருத்துவமனைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காரணம் இதே இந்துஜா மருத்துவமனையில் மார்பு நோய் காரணமாக அனுமதிக்கப்பட்ட 64 வயது மூத்த குடிமகன் ஒருவருக்கு பிற்பாடு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதனால் மற்றவர்களுக்கும் பரவும் என்ற அச்சத்தினால் தனியார் மருத்துவமனைகள் புதிதாக கோவிட் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை சேர்க்க தயங்குகிறது.
இந்த 64 வயது நபர்தான் பிற்பாடு கஸ்தூரிபா மருத்துவமனையில் கோவிட்டுக்கு பலியானார், ஆனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்கள் 8 பேருக்கு தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தன் தந்தைக்கு மார்ச் 17ம் தேதியன்று இவ்வாறு நிகழ்ந்ததாக மகன் குற்றம்சாட்டினார்.