

கரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அழைப்புவிடுத்த மக்கள் ஊரடங்கு நேற்று நாடுமுழுவதும் வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக தலைநகர் டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
சீனா, ஈரான், இத்தாலியை தொடர்ந்து கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் நாட்டில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 361 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்தியசுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் மார்ச் 22-ம் தேதி (நேற்று) சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, நேற்று இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கரோல் பாஹ் சந்தை, முகார்பா சவுக், லஜ்பத் நகர் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி காணப்பட்டது. ஒரு சில அரசுப் பேருந்துகளும், டாக்சிகளும் மட்டுமே இயக்கப்பட்டன.
மக்கள் நெரிசலுக்கு பெயர் போன மும்பையிலும் நேற்று ஆள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. மக்கள் கூட்டம் அலைமோதும் புறநகர் ரயில்கள், ஒரு சில நபர்களுடன் மட்டுமே இயக்கப்பட்டதைக் காண முடிந்தது. கடைகள், வணிக வளாகங்கள், திரை அரங்குகள், பார்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
கொல்கத்தாவிலும் மக்கள் ஊரடங்கு மிகச் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், எப்பொழுதும் கூட்ட நெரிசலில் ஸ்தம்பிக்கும் எஸ்பிளனேடு, டல்ஹவுசி, விமான நிலையம் ஆகிய பகுதிகள் ஆள் அரவமின்றி காட்சியளித்தன. பிரதான சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி மைதானங்களை போல மாறியிருந்தன. அவசரத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
இதேபோல, பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹரியாணா, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய அனைத்து மாநிலங்களிலும் சுய ஊரடங்கை மக்கள் பொறுப்புணர்வுடன் கடைப்பிடித்ததை பார்க்க முடிந்தது.
மக்கள் பாராட்டு
கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இரவு பகலாக சிகிச்சையளித்து வருகின்றனர். காவல்துறையினரும், ஊடகத் துறையினரும் இந்த இக்கட்டானசூழலிலும் மக்களுக்காக உழைத்து வருகிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சுய ஊரடங்கு கடைப்பிடிக்கும் நாளன்று மாலை 5 மணிக்கு பொதுமக்கள் அனைவரும் கைதட்ட வேண்டும்என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு இணங்க, நேற்று மாலை 5 மணிக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் கூடி கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
மோடி நன்றி
இதனிடையே, பிரதமர் மோடி தனதுட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது; கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கை கடைபிடித்த இந்திய மக்களுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா அச்சுறுத்தலை எதிர்த்து போராட இந்தியா தயாராகிவிட்டது என அதில் அவர் தெரிவித்துள்ளார்.