

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆராய்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க குளிர்கால கூட்டத்தொடர் வரை நேற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய நிலம் கையக மசோதாவை பாஜக எம்.பி. எஸ்.எஸ். அலுவாலியா தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க ஏற்கெனவே ஆகஸ்ட் 11 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் சில பிரிவுகளில் உறுப்பி னர்கள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இந்நிலையில் இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் காலக்கெடுவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் வாரம் வரை நீட்டிக்க கோரும் தீர்மானம் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. லலித் மோடி விவகாரத்தில் எதிர்க்கட்சியினரின் அமளிக்கு இடையே இத்தீர்மானம் நிறைவேறியது.
காடுகள் பரப்பளவு குறைகிறது
ஆக்கிரமிப்புகள், சுரங்கப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் நாட்டின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காடுகளின் பரப்பளவு சுமார் 1,200 சதுர கி.மீ. குறைந்துள்ளதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மேலும் கூறும்போது, “இந்திய வன நிலவர அறிக்கை 2013-ன்படி நாட்டின் வனப் பகுதி 6,97,898 சதுர கி.மீ. ஆக உள்ளது. இது நாட்டின் பரப்பளவில் 21.23 சதவீதம் ஆகும்” என்றார்.
திறன் மேம்பாட்டு பயிற்சி
மாற்றுத் திறனாளிகள் 1 லட்சம் பேருக்கு மத்திய அரசு இந்த நிதியாண்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவுள்ளது. மக்களவையில் சமூகநீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் கூறும்போது, “இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட தேசிய திறன் மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.