

கரோனா தொற்று உள்ளோர் அதிகம் உள்ள 75 மாவட்டங்களை மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி மக்கள் ஊரடங்கு நடந்து வருகிறது.
இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுதை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை மத்திய அரசு இன்று எடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக கரோனா தொற்று உள்ளோர் அதிகம் உள்ள 75 மாவட்டங்களை மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா 10 மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 7 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.