எம்.பி.க்கள் இடைநீக்கம்: சோனியா தலைமையில் 2-வது நாளாக காங்கிரஸ் போராட்டம்

எம்.பி.க்கள் இடைநீக்கம்: சோனியா தலைமையில் 2-வது நாளாக காங்கிரஸ் போராட்டம்
Updated on
1 min read

மக்களவையிலிருந்து தங்கள் கட்சி எம்பிக்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில் 2-வது நாளாக நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து இதர 6 அரசியல் கட்சிகளும் பங்கேற்றன.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தலைமை வகித்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். சில தலைவர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்தும் சிலர் கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் சரத் யாதவ், கே.சி.தியாகி, சமாஜ்வாதிகட்சியின் தர்மேந்திர யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஜெயப்பிரகாஷ் நாராயண் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.கருணாகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீ்க் தலைவர் இ.அகமது உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது, தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக சோனியா உள்ளிட்ட தலைவர்கள் கோஷம் எழுப்பினர். ‘சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’, ‘பிரதமரே மவுனத்தை கலை’, ‘நல்லாட்சி எங்கே போனது’, ‘சுஷ்மாவே ராஜினாமா செய்’ என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து சோனியா காந்தி கூறும்போது, “காங்கிரஸ் எம்பிக் கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெறுவது குறித்தோ, பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தோ அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் கிடைக்கவில்லை. எனவே, இந்த போராட்டம் வியாழக்கிழமையும் தொடரும்” என்றார்.

ராகுல் காந்தி கூறும்போது, “மக்களவைத் தலைவரின் முடிவை நாங்கள் விரும்பவில்லை. எனினும் அவரது பதவிக்கு மரியாதை அளிக்கிறோம்” என்றார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் மக்களவைத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என்ற காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைமை கொறடா ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகக் கூறி, காங்கிரஸ் உறுப்பினர்கள் 25 பேரை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திங்கள்கிழமை உத்தரவிட்டார் என்பது குறிப் பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in