

கரோனா வைரஸ் தொற்று நாட்டில் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள், என்பிஆர் மேம்படுத்தும் பணிகள் காலவரையின்றி தாமதமாகும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி சென்செஸ், என்பிஆர் பணிகளின் முதல் கட்டம் தொடங்கத் திட்டமிட்ட நிலையில் அது ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
என்பிஆர், மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணிகளை ஒத்திைவப்பது குறித்து உள்துறை அமைச்சகத்தில் உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
என்பிஆர், மக்கள்தொகை கணக்கெடுப்பின் இறுதிக்கட்டப் பணிகளில் அதிகாரிகள் கடந்த வாரத்தில் இருந்தனர். ஆனால், கரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமாக இருப்பதால், வேறுவழியின்றி இரு பணிகளையும் மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது. டெல்லி ஷாகின் பாக்கில் இன்னும் போராட்டம் ஓயவில்லை. இந்த சூழலில் என்பிஆர் ஒத்திவைப்பு அறிவி்ப்பு வரும் எனத் தெரிகிறது
மேலும், என்பிஆர், என்ஆர்சி, சிஏஏவுக்கு எதிராக கேரளா, தெலங்கானா, பஞ்சாப், பிஹார், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்பட பல மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உதவுவோம், என்பிஆர் பணிகளுக்கு உதவமாட்டோம் என மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இது குறித்தும், கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து இருப்பது குறித்தும் உள்துறை அமைச்சகம் சார்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. அதில் தற்போதுள்ள நிலையில் என்பிஆர், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு சாதகமான சூழல் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனால் அடுத்த சில நாட்களில் இந்த அறிவிப்பை அதிகாரிகள் வெளியிடலாம் எனத் தெரிகிறது. என்பிஆர் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.3,914 கோடி ஒதுக்கி இருந்தது.