

கரோனா வைரஸ் பரவுதை பொறுத்தவரையில் மகாராஷ்டிர மாநிலம் மிக முக்கியமான கட்டத்தில் இருப்பதால் நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மக்களை எச்சரித்துள்ளார்.
சீனாவில் உருவாகி உலகை ஆட்டிப் படைத்து வரும் கரோனா வைரஸுக்கு உலக நாடுகள் அஞ்சி வருகின்றன. உலக அளவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும். தடுப்பு நடவடிக்கைகளும் எடுத்தாலும் கரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மேலும் இன்று மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி மக்கள் ஊரடங்கு நடந்து வருகிறது.
இந்தநிலையில் மகாராஷ்டிராவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மக்களை எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸ் பரவுதை பொறுத்தவரையில் மகாராஷ்டிர மாநிலம் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே மக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கரோனாக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்றால் மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இதனால் வேறுவழியில்லை. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் எந்த விமானமும் மகாராஷ்டிர மாநிலத்திற்குள் தரையிறங்க அனுமதியில்லை.
நாளை காலை வரை ஊடரங்கு தொடரும். மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.