Last Updated : 22 Mar, 2020 03:40 PM

 

Published : 22 Mar 2020 03:40 PM
Last Updated : 22 Mar 2020 03:40 PM

கரோனா அச்சுறுத்தல்: வங்கி ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஐபிஏ அறிவுரை

கரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, வங்கியில் பணத்தைக் கையாளும் ஊழியர்கள் பணத்தைக் கையாண்டபின் கைகளை நன்கு கழுவுமாறு இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (ஐபிஏ) அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 6 பேர் கரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளார்கள். 350க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று ஒருநாள் மக்கள் ஊரடங்கு பிரதமர் மோடியின் வேண்டுகோளின் பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேவர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வங்கி ஊழியர்களின் நலன் கருதி இந்திய வங்கிகள் கூட்டமைப்பும் (ஐபிஏ) அறிவுரை வழங்கியுள்ளது. ஐபிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

'' மக்கள் அனைவரும் ரூபாய் நோட்டுகளைக் கையாளும்போது கைகளை நன்றாகக் கழுவிவிட்டுக் கையாள வேண்டும் அல்லது எண்ண வேண்டும். மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்ற வங்கி்த் துறை தயாராக இருக்கிறது.

ஆனால், இதுபோன்ற காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் அனைவரும் வங்கிக்கு நேரடியாக வருவதைத் தவிர்தது ஆன்லைன் மூலமும், மொபைல் பேங்கிங் மூலமும் பரிவர்த்தனையை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவசியமின்றி வங்கிக்கு வர வேண்டாம். அது வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக ஆபத்தாக முடியும்.

வங்கி ஊழியர்கள் பணத்தைக் கையாண்ட பின் குறைந்தபட்சம் 20 வினாடிகள் கைகளை சோப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கழுவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வங்கி ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட கரோனா சே தரோ நா, டிஜிட்டல் கரோ நா என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

மக்கள் அனைவரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பேமென்ட்டை செலுத்துமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். மக்கள் எந்த அளவுக்கு சவால்களையும், கரோனா மீதான அச்சத்தையும் எதிர்கொள்கிறார்களோ அதேபோலவே வங்கி ஊழியர்களும் எதிர்கொள்வார்கள். ஆதலால், வங்கிக்கு அவசியமின்றி வர வேண்டாம்.

வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வங்கிச் சேவைகளான இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், மின்னணுப் பரிமாற்றங்களான ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி ஆகியவை தடையின்றி கிடைக்கும். டிஜிட்டல் சேவை மக்களுக்குத் தடையின்றி கிடைக்கும் வகையில் வங்கி ஊழியர்கள் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள். உங்களுக்கு இந்த நேரத்தில் இந்த சேவை தேவைப்படும்''.

இவ்வாறு ஐபிஏ தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x