

நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் ஊரடங்கை ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும். பாரத் மாதா கி ஜே என்று கோஷமிடுபவர்கள் தேசத்துக்கு சேவை செய்ய இதுதான் உகந்த நேரம் என்று சிவசேனா சேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கரோனா வைரஸ் மெல்லத் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனா வைரஸ் பாதிப்பு இந்த வாரத்தில் 3 இலக்கத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 72 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக 2 பேர் இங்கு உயிரிழந்துள்ளனர்.
இதனால் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும்,மகாராஷ்டிர அரசும் எடுத்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பிரதமர் மோடியால் அறிவி்க்கப்பட்டு இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கரோனா வைரஸின் கொடூரத்தை உணர்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு மும்பையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''கரோனா வைரஸ் மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதிலும் பொருளாரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பிரதமர் மோடி அறிவி்த்த மக்கள் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் கரோனா பரவும் அளவு நிச்சயம் கட்டுப்படுத்தப்படும்.. மக்கள் ஊரடங்கை ஒரு வாரத்துக்கு முன்பாகவே கொண்டு வந்திருக்க வேண்டும்.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மாநில அரசுகளுக்கு பல்வேறு பட்ட கருத்துகள் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை இந்த லாக்-டவுன் முடிவு சிறிது முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும்.
மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதற்கு இது சரியான நேரமில்லை. சீனாவைப் போல் எதேச்சதிகாரத்துடன் சில முடிவுகளை மத்திய அரசு எடுக்கவேண்டும். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தங்களின் முடிவை, தீர்க்கமாக, கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக அப்பாவி மக்களை அடித்துக் கொலை செய்தவர்கள், பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டவர்கள் அனைவரும், தேசத்துக்கு சேவை செய்யவும், மக்கள் உயிரோடு இருக்க உதவி செய்யவும் இதுதான் சரியான நேரம்.
மக்கள் தங்களின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தியதால்தான் கடந்த காலங்களில் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். நம்முடைய உணவு சாப்பிடும் அளவைக் குறைக்கும்போதுதான் நாம் நீண்ட காலத்துக்கு வாழ முடியும் .
கரோனா வைரஸ் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு அடுத்த சில ஆண்டுகளுக்கும் நீடிக்கும். இதற்காக மத்திய அ ரசுக்கு ஆதரவாக நாம் துணை நிற்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் அரசு மீது குறை சொல்வதையும், பழி போடுவதையும் அளவுடன் வைக்க வேண்டும். அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல''.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.