

‘‘கரோனா வைரஸால் ஒருவேளை மக்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டால், சிகிச்சை அளிப்பதற்கு முன்னேற்பாடாக படுக்கைகள், தனிமை வார்டுகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஒதுக்கி வைக்க வேண்டும்’’ என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒருவேளை வைரஸ் பாதிப்பு அதிகமானால் சிகிச்சை அளிப்பதற்கு முன்னேற்
பாடுகளை செய்து வைப்பது குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை இரவு சில வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கைகளை ஒதுக்கி வைக்க வேண்டும். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு தேவையான தனிமை வார்டுகளை ஒதுக்க வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போதிய அளவுக்கு வென்டிலேட்டர்களை (செயற்கை சுவாசம் அளிக்கும் கருவி) வாங்கி வைக்க வேண்டும். ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு கூடுதலாக மருத்துவப் பணியாளர்களை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
தற்போதைக்கு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கரோனா வைரஸ் பரவும் நிலை (சமுதாய பரவல்) வரவில்லை. ஒருவேளை பாதிப்பு அதிகமானால், நாடு முழுவதும் அதை சமாளிக்க அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்கு தேவையான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் வாங்கி வைக்க வேண்டும்.
யாருக்காவது கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகித்தால், உடனடியாக அவரை தனிமைப்படுத்தி விடவேண்டும். வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. நோயாளிகளின் வருகை அதிகமானால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையைத் தொடங்க அனைத்து மருத்துவமனைகளும் தயாராக இருக்க வேண்டும்.
முகக் கவசங்கள், கையுறைகள், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள் அணியும் பாதுகாப்பு உடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை போதிய அளவு வாங்கி வைத்திருக்க வேண்டும்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவப் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.
தற்போதைய நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகளில் 19,111 படுக்கைகள் ஒதுக்கி
வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையும் 2.5 மடங்கு அதிகமாக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்பிறகு நிலைமையைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.