

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பஞ்சாபிகள் அடங்கிய 300 இந்தியர்கள் தங்களை மீட்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ள வீடியோ ஒன்றை ஆம் ஆம் ஆத்மி எம்.பி பகவந்த் மான் தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
உலகமெங்கும் கரோனா வைரஸ் தாக்கம் கடுமையாகி வருவதை அடுத்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகினறன. அதன் முதற்கட்டமாக விமான போக்குவரத்துக்களை தடை செய்தன. எனினும் இதில் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள பயணிகள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.
எனினும் இந்தியா ஈரானில் சிக்கிய 300க்கும் மேற்பட்டவர்களை மீட்டு வந்தது. அதேபோல் சிங்கப்பூரில் சிக்கிய மாணவர்களையும் மீட்டு வர நடவடிக்கைள் மேற்கொண்டது. தற்போது மலேசியாவிலும் இந்தியர்கள் சிக்கித் தவித்துவரும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
மலேசியாவிலிருந்து விமானங்கள் நுழைய இந்தியா தடை விதித்ததை அடுத்து கோலாலம்பூர் விமான நிலையத்தில் பஞ்சாபிகள் அடங்கிய சுமார் 300 இந்தியர்கள் தவித்து வருவது குறித்து மலேசிய ஊடகங்களின் வீடியோ ஒன்றை ஆம் ஆத்மி எம்.பி. வெளியிட்டுள்ளார்.
அதில் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் 300 பேர் தங்களை மீட்குமாறு ஊடகங்கள் வாயிலாக இந்திய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் சார்பாக அமர்ஜீத் சிங் என்பவர் பேசியுள்ள வீடியோவில் கூறியள்ளதாவது:
"கோவிட் 19ஐத் தடுக்க எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி நாங்கள் சிக்கித் தவித்து வருகிறோம். இதனால் நாங்கள் மலேசிய விமான நிலையத்தில் உயிரிழக்க நேரிடும்.
நாங்கள் கையில் வைத்திருந்த பணத்தில் பெரும்பாலும் செலவழித்துவிட்டோம். மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் எந்த அதிகாரியும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை,
ஒரு பெண் மற்றும் இரண்டு பேருக்கு உணவு ஏற்பாடு செய்வதற்காக அவர்களிடம் பணம் வசூலித்துள்ளனர். ஆரம்பத்திலேயே எங்களை மீட்க வேண்டுமென்று நாங்கள் ஏற்கெனேவே வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் அரசாங்கம் அதற்கு பதிலளிக்கவில்லை.
இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளும் சிக்கித் தவித்த தமது பயணிகளை மீட்டுள்ளது.
பயணிகளில் பெரும்பாலோர் போக்குவரத்தில் உள்ளதால் யாரிடமும் சென்று முறையிட இயலாத நிலையில் உள்ளோம். இதற்கு வெளிவிவகார அமைச்சர் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்கள் தலையிட்டால் எங்களை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வர முடியும்.
இவ்வாறு மலேசிய விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் சார்பாக அமர்ஜீத் சிங் என்பவர் வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆம் ஆத்மி எம்.பி தனதுதளத்தில் இன்னொரு வீடியோ பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதில் கனடா குடியுரிமை பெற்ற ஒரு இந்திய தாய் தனது ஆறு மாத பெண் குழந்தையோடு துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்ததாகவும் மான் தெரிவித்துள்ளார்.
அதில் ''அதிகாரிகள் கனடாவில் பிறந்த குழந்தைக்கு அனுமதி தரமுடியாது என்றும் அக்குழந்தை கனடாவுக்கு செல்ல வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். தாயை மட்டும் இந்தியா செல்ல அனுமதி வழங்கியுள்ளனர். அவர்கள் குழந்தையை தாயிடமிருந்து எவ்வாறு பிரிக்க முடியும்? அந்தப் பெண் தனது குழந்தையுடன் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்புகிறார். இந்திய அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.