

காசர்கோட் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் அடைக்கக் கோரி உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட நிலையில் உத்தரவை மீறி கடைகளைத் திறந்த 10 வியாபாரிகள் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
கேரளா, காசர்கோட் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நடமாடி வருவதாக வந்த தகவல்களை அடுத்து முதல்வர் பினராயி விஜயன் ‘கவலையளிக்கும் விஷயம்’ என்று தெரிவித்தார்.
முதல்வர் பினராயி விஜயன் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரு வாரத்திற்கு மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார், கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையே காசர்கோட்டில் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஏற்கெனவே 2 எம்.எல்.ஏ.க்கள் சுய-தனிமைக்குச் சென்று விட்டனர். ஏனெனில் இவர்கள் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தனர்.
எச்சரிக்கையையும் மீறி காசர்கோட்டில் கடைகளைத் திறந்து வைத்த வியாபாரிகள் மீது மாவட்ட கலெக்டர் சாஜித் பாபு வழக்கு தொடர போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பலக்குழுக்களை நியமித்து கடைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டிருந்தனர். மாவட்ட ஆட்சியரே நேரடியாக பல இடங்களுக்குச் சென்று சோதனை மேற்கொண்டார்.
“சுகாதார அமைச்சகம் அளிக்கும் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும், வைரஸ் மேலும் பரவாமல் இருக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே மீறல்கள் இருந்தால் மேலும் வழக்குகள் தொடரப்படும்” என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் அவர் கூறும்போது, “ஏற்கெனவே 12 வழக்குகளைத் தொடர அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் சிலர் எச்சரிக்கைகளை மதிக்காமல் செயல்பட்டால் எங்களால் சூழ்நிலையைக் கட்டுக்கு மீறி செல்வதை அனுமதிக்க முடியாது” என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் வீட்டிலேயே தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்ட நபர் ஒருவர் வெளியில் நடமாடி உத்தரவுகளை மீறி வருவதாக தெரிந்ததையடுத்து இவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அயல்நாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் 14 நாட்கள் கட்டாய தனிமை இருப்பை மீறி வெளியில் நடமாடி மக்களை சந்தித்து வருவதாக அண்டை வீட்டார்கள் எழுப்பிய புகாரின் பேரில் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காசர்கோட்டில் புதிதகா 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள், கிளப்புகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று பரவியிருப்பதை அடுத்து கேரளாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.