

இந்திய, பாகிஸ்தான் பேச்சு வார்த்தையின்போது தீவிரவாதம் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பேச்சுவார்த் தையில் பங்கேற்க இந்திய தரப்பில் நிபந்தனைகள் விதிப்பதை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ரஷ்யாவின் உபே நகரில் கடந்த ஜூலையில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசி கூட்டறிக்கை வெளியிட்டனர். அதன் அடிப்படையில் டெல்லியில் இன்று இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் காஷ்மீர் பிரிவினை வாதிகளை சந்தித்துப் பேசவும் பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது.
பாகிஸ்தான் பிடிவாதம்
இதுகுறித்து பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் இஸ்லாமாபாதில் நிருபர் களிடம் நேற்று கூறியதாவது: பேச்சு வார்த்தை பட்டியலில் காஷ்மீர் விவகாரம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இந்திய தரப்பி னரை எப்போது சந்தித்தாலும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பு வோம்.
காஷ்மீரின் பல்வேறு பிரிவு தலைவர்களின் கருத்துகளை அறியவே அவர்களை சந்தித்துப் பேச அழைப்பு விடுத்துள்ளோம். இதை இந்தியா ஏற்க மறுப்பது துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற அற்ப காரணங்களுக்காக பேச்சுவார்த்தையை ரத்து செய்யக் கூடாது.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை கைது செய்வதும் வீட்டுக் காவலில் வைப்பதும் கவலையளிக்கிறது. இது அடிப்படை உரிமை மீறல் ஆகும்.
இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘ரா’, பாகிஸ்தானில் மேற்கொண்டு வரும் செயல்கள் பற்றி 3 ஆவணங்களை தயாரித்து வைத்துள்ளோம். எனது டெல்லி பயணத்தின்போது இந்த ஆவணங் களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலிடம் வழங்கு வேன். பேச்சுவார்த்தைக்கு பாகிஸ் தான் தயாராகவே உள்ளது, ஆனால் நிபந்தனைகள் விதிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கு பதில் அளிக் கும் வகையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இருநாட்டு பிரதமர்கள் ரஷ்யா வில் வெளியிட்ட கூட்டறிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். அதன்படி தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்து மட்டுமே பேச்சு நடத்தப்பட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினால் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை.
இந்திய, பாகிஸ்தான் பேச்சு வார்த்தையில் ஹுரியத் உள்ளிட்ட மூன்றாம் தரப்புக்கு இடமே இல்லை. ஹுரியத் தலைவர்களை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு தீவிரவாதம் குறித்து பேச்சு நடத்த தயார் என்றால் சர்தாஜ் அஜீஸை வரவேற்போம்.
இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டோம். இனிமேல் அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். பாகிஸ் தானின் பதிலுக்காக சனிக்கிழமை இரவுவரை காத்திருப்போம்.
இந்தியத் தரப்பில் பாகிஸ் தானுக்கு நிபந்தனை எதுவும் விதிக்கப்படவில்லை. அதேபோல பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா விலகி ஓடவும் இல்லை. பாகிஸ்தான்தான் பின்வாங்குகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸை சந்திக்க பிரிவினைவாதத் தலைவர் ஷபீர் ஷா ஸ்ரீநகரில் இருந்து நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் தனது கொள்கையில் தொடர்ந்து பிடிவாத மாக இருப்பதால் இன்று தொடங்க வேண்டிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.