

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் பற்றிய சிறப்பான புத்தகம் வெளியிட்டதற்காக ‘தி இந்து’ குழுமத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் பற்றிஅவரது வாழ்வு மற்றும் சிந்தனைகளின் தொகுப்பாக ‘ The Monk Who Took India to the World’ என்ற தலைப்பில் ஆங்கில புத்தகம் ‘தி இந்து’ குழும பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக ‘தி இந்து’ குழுமத்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’ குழுமத்தின் துணைத் தலைவர் மாலினி பார்த்தசாரதிக்கு பிரதமர் மோடி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வேத தத்துவத்தின் கம்பீரமான மேன்மையை உலகிற்கு அறிமுகப் படுத்தியதன் மூலம் இந்தியா பற்றிய மேற்கத்திய நாடுகளின் பார்வையை மாற்ற சுவாமி விவேகானந்தர் உதவினார். ஒவ்வொரு மனிதனிடமும் அவர் கொண்ட அன்பால் ஏற்பட்ட பரந்த தொலைநோக்கு பார்வை கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே பாலம் ஏற்பட உதவியாக இருந்தது.
ஆழமான ஆன்மிக சிந்தனை
இந்தியாவின் கடந்த காலசிறப்பு மிக்க, உயர்ந்த பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் ஆழமான ஆன்மிக சிந்தனைகளையும் தட்டி எழுப்பியதன் மூலம் இந்தியாவின் சுதந்திரபோராட்டத்துக்கு புதிய நம்பிக்கையையும் புதிய எழுச்சியையும் விவேகானந்தர் அளித்தார்.
துடிப்பும் எழுச்சியும் மிக்க இளைஞர்கள் புதிய இந்தியாவைக் கட்டியமைப்பார்கள் என்ற இறவாத நம்பிக்கையை விவேகானந்தர் கொண்டிருந்தார். சுவாமிஜியின் சிந்தனைகளும் கொள்கைகளும் இன்றைக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமளித்து வழிநடத்துவதாக உள்ளன. அவரது சிந்தனைகள் புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பார்வையை அளித்து அதை நோக்கி நம்மை செலுத்துவதாக உள்ளன.
விவேகானந்தரின் இத்தகைய சிறப்பு வாய்ந்த தொலைநோக்குப் பார்வையை சுருக்கமாக எடுத்துக்காட்டும் வகையில் ‘தி இந்து’குழுமம் வெளியிட்ட புத்தகம் விளங்கும் என்று உறுதியாக நம்புகிறேன். சுவாமி விவேகானந்தர் பற்றிய சிறப்பான புத்தகத்தை வெளியிட்டதற்காக ‘தி இந்து’குழுமத்துக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இந்த புத்தகம் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு பரவலான வரவேற் பையும் பாராட்டையும் பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.