

ஜெர்மனியில் இருந்து வந்த 25 வயது மகனை, ரயில்வே ஓய்வில்லத்தில் தங்க வைத்த பெண் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே மண்டல செய்தித் தொடர்பாளர் இ.விஜயா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரயில்வேயில் உதவி பணியாளர் அதிகாரியாகப் பணிபுரியும் பெண் அதிகாரியின் 25 வயது மகன்,ஜெர்மனியில் இருந்து ஸ்பெயின் வழியாக கடந்த 13-ம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேசவிமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அதன்பின், பெங்களூருவின் முக்கிய ரயில்வே நிலையத்தின் அருகில் உள்ள ஓய்வில்லத்தில் அந்தப் பெண் அதிகாரி தனது மகனை தங்க வைத்துள்ளார். அவர் 13-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை ரயில்வே இல்லத்தில் தங்கியுள்ளார். அங்கிருந்தபடி தானாகவே அந்த இளைஞர்பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு ரயில்வே ஓய்வில்லத்துக்குத் திரும்பி உள்ளார்.
இதற்கிடையில், இளைஞருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த 18-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. மகனின் பயணம் குறித்த தகவலை அதிகாரிகளுக்கு தெரிவிக்காதது மட்டுமல்லாமல், மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவர் செயல்பட்டுள்ளார்.
அதன்பிறகும் அவர் வழக்கம் போல் அலுவலகத்துக்கும் வந்து சென்றுள்ளார். இதன் மூலம் அவர் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளார். இதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வில்லம் மூடப்பட்டுவிட்டது. ஓய்வில்லம் முழுவதும் கிருமி நாசினியால் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
ரயில்வே ஓய்வில்லத்தின் சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் ஓய்வில்லத்தில் தங்கி சென்றவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடல்நலத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக அரசுக்குத் தெரிவிக்கும்படி அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ரயில்வே செய்தித் தொடர்பாளர் விஜயா கூறினார்.