ம.பி.யில் பதவி விலகிய முதல்வர் கமல்நாத்துடன் சவுகான் திடீர் சந்திப்பு

ம.பி.யில் பதவி விலகிய முதல்வர் கமல்நாத்துடன் சவுகான் திடீர் சந்திப்பு
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில் பதவி விலகிய முதல்வர் கமல்நாத்தை பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் திடீரென சந்தித்து பேசினார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதன்தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

இதனால் பெரும்பான்மை இல்லாத சூழலில் முதல்வர் கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை. இதையடுத்து
இந்த சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தொடரை இன்று கூட்ட வேண்டும் என்றும், மாலை 5 மணிக்குள்ளாக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதன்படி இன்று பிற்பகல் ம.பி. சட்டப்பேரவைக் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் ஒப்படைத்தார்.

இந்த விவகாரத்தில் பாஜகவை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் பதிலடி கொடுத்தார்.

உட்கட்சி மோதல் உருவாகி காங்கிரஸ் அரசு கவிழந்துள்ளது, இதுபோன்ற சூழல் ஏன் ஏற்பட்டது என்பது பற்றி காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

இந்தநிலையில் ராஜினாமா செய்து தற்போது பொறுப்பு முதல்வராக இருக்கும் கமல்நாத்தை அவரது வீட்டிற்கு சென்று பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார். பதவி விலகிய அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக சவுகான் தெரிவித்தார். அரசியல் ரீதியாக கடும் எதிரிகளாக இருக்கும் இருவரும் திடீரென சந்தித்து கொண்டபோதும் சகஜமாக பேசிக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in