

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா ரைவஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அவர் தகவலை மறைத்ததாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என தனியார் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் சுற்று அடிப்படையில் வீடுகளில் இருந்து பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளனர்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் வரும் 22-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் "ஜனதா ஊரடங்கு" பிறப்பிக்கப்படுகிறது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா ரைவஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். பின்னர் அவர் லக்னோ சென்றுள்ளார். லக்னோவில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் கூறவில்லை. எனக்கூறப்படுகிறது.
லக்னோவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் முன்னெச்ரிக்கையாக தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார். இதுபோலவே அவரது மகன் துஷ்யந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதனால் கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தகவல்களை மறைத்த கனிகாவை தண்டிக்க வேண்டும் என பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.