

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.
கருணை மனுக்கள், மறு ஆய்வு மற்றும் சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 3 முறை டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் தூக்கு தண்டனை தள்ளிப்போனது. 4-வது முறையாக டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இன்று அதிகாலை 5.30 மணிக்கு டெல்லி திஹார் சிறையில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவுடன் குற்றவாளிகள் 4 பேரின் உடல்களையும் 30 நிமிடங்கள் கயிற்றில் தொங்கவிட்டபின்பு இறக்கியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திஹார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல் நிருபர்களிடம் கூறுகையில், "தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பின் மருத்துவர் ஆய்வு செய்து, உயிர் பிரிந்து விட்டது என அறிவித்த பின் உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் சென்றோம். உடற்கூறு ஆய்வு முடிந்த பின் நான்கு பேரின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன" எனத் தெரிவித்தார்.
திஹார் சிறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "குற்றவாளி அக்சயின் உடலைப் பெற்ற உறவினர்கள் பிஹாரில் உள்ள அவுரங்காபாத் அருகே இருக்கும் கிராமத்துக்குக் கொண்டு சென்றனர். முகேஷின் உடலை அவரின் பெற்றோர் ராஜஸ்தான் மாநிலத்துக்குக் கொண்டு சென்றனர். வினய் குமார், பவன் குப்தா ஆகியோரின் உடல்கள் தெற்கு டெல்லியில் உள்ள ரவிதாஸ் கேம்ப் பகுதியில் உள்ள அவர்களின் வீடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இதில் குற்றவாளி முகேஷ் தூக்கிலிடுவதற்கு முன்பாக தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக வழங்க வேண்டும் என்று சிறை கண்காணிப்பாளரிடம் கடைசியாகத் தெரிவித்தார்.
வினய் குமார் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன், சிறையில் தான் வரைந்த ஓவியங்களில் அனுமன் மந்திரம் தொடர்பான ஓவியத்தை சிறைக் கண்காணிப்பாளருக்கும், மற்றொரு ஓவியத்தைத் தனது குடும்பத்தினருக்கும் வழங்க விரும்புகிறேன் எனக் கடைசியாகத் தெரிவித்தார்.
மற்ற இரு கைதிகளான பவன் குப்தா, அக்சய் குமார் இருவரும் தங்களின் கடைசி ஆசைகளையும், வார்த்தைகளையும் பேசாமலேயே தூக்கு மேடைக்கு ஏறினர்" எனத் தெரிவித்தார்.